தில்லி
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது மின்னல் வேகத்தில் உள்ளது. தினமும் 3000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். 80-க்கும் மேற்பட்டோர் பலியாகுகின்றனர். மூன்றாம் கட்ட ஊரடங்கு விதித்தும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. மூன்றாம் கட்ட ஊரடங்கு வரும் 17-ஆம் தேதி நிறைவு பெறும் நிலையில், அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனையில் மத்திய அரசு இல்லை. அதற்கு மாறாக கொரோனா பரவல் அதிகம் உள்ள இந்த நேரத்தில் மக்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு தேவையில்லாத ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளி 11-வது இடத்துக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. தற்போதைய நிலையில் சீனாவில் கொரோனா பாதிப்பு 82 ஆயிரத்து 918 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 4 ஆயிரத்து 633 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை 70 ஆயிரத்து 768 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியா கொரோனா பாதிப்பில் உலகளவில் 12-வது இடத்தில் உள்ளது.
குறிப்பாகச் சீனாவில் தினமும் 20 பேர் தான் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்தியாவில் 3000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதால் விரைவில் சீனாவை பின்னுக்குத்தள்ளி 11-வது இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.