புதுதில்லி:
மும்பை, புனே கோல்கட்டா உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. இது கொரோனா பரவலின் தீவிரத்தை அதிகப்படுத்தும் உன மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே, மத்தியப்பிரதேச மாநிலம் இந்துார், மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா, ஹவுரா, கிழக்கு மித்னாபூர், டார்ஜிலிங், கலிம்பொங், ஜல்பைகுரி, 24 பர்கானாக்கள், இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஊரடங்கு விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. சமூக விலகல் நடவடிக்கைகள் பின்பற்றப்படுவது இல்லை என உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் அடுத்த மூன்று நாட்களுக்குள் மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தானில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு செல்ல உள்ளதாகவும், அங்கேயே நிலைமையை ஆய்வு செய்து அதை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை அளிக்கும் என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கூறியுள்ளார்.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிராக பல வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது, சமூக விலகல் முழுமையாக மீறப்படுகிறது, நகர்ப்புறங்களில் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்கின்றன என மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், மேற்குவங்கம், இராஜஸ்தான் மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் உள்துறை அமைச்சகம் கடிந்துகொண்டுள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள், காவல்துறையினர் காயமடைந்துள்ளனர் என்றும் உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. மஹாராஷ்டிராவில், 232 பேர்; மத்திய பிரதேசத்தில், 74 பேர்; இராஜஸ்தானில், 25 பேர், கொரோனா தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.