புனே அருகில் தன் குழந்தையை தாக்கிய சிறுத்தையுடன் வெறும் கைகளில் சண்டையிட்டு தாய் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகிலுள்ள பிம்ரி சிஞ்வாட் என்ற கிராமத்தில் கரும்பு அறுக்கும் விவசாயத் தொழிலாளரான பெண் ஒருவர் சிறுத்தையிடம் சண்டையிட்டு தன் குழந்தையான தினேஷ்வர் மாலியை காப்பாற்றியுள்ளார். குழந்தை தன் குடும்பத்துடன் தன் குடிசை வீட்டு முன்பு உறங்கும்போது சிறுத்தை அக்குழந்தையை தூக்கி செல்ல முயன்றுள்ளது. அப்போது சிறுத்தையின் சத்தத்தில் விழித்துக்கொண்ட அப்பெண் சிறுத்தையுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார். அப்போது குழந்தையை விட்ட சிறுத்தை அப்பெண்ணின் கையை கடித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, அருகிலிருந்த அனைவரும் விழித்துக் கொள்ள சிறுத்தை அப்பகுதியை விட்டு சென்றுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய வனத்துறை அதிகாரி விஷால் அதாகலே பெண்ணின் கையை கடித்த சிறுத்தை அப்பெண் எழுப்பிய கூச்சலில் அந்த இடத்தை விட்டுச் சென்றுள்ளது. இரவு சுமார் 1.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதி மக்கள் திறந்தவெளியில் தூங்குவதை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.