தில்லி
இந்திய மக்கள் கொரோனவை விரட்ட 2-ஆம் கட்ட ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். ஊரடங்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முயற்சித்தாலும் அது சவாலான காரியமாக உள்ளது.
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,456 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 88 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 423 பேர் பலியாகியுள்ளனர். ஆசிய அளவில் கொரோனா பாதிப்பில் தற்போது 5-வது இடத்தில் உள்ள இந்தியா 4-வது இடத்தில் உள்ள இஸ்ரேலை விரைவில் பின்னுக்குத்தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலில் இதுவரை 12,591 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அங்குப் பலி எண்ணிக்கை மிகவும் குறைவு தான். இதுவரை அங்கு 140 பேர் பலியாகியுள்ளனர். ஆசிய அளவில் சீனா முதலிடத்திலும், ஈரான் 2-வது இடத்திலும், துருக்கி 3-வது இடத்திலும் உள்ளது. உலகளவில் இந்தியா 20-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.