tamilnadu

img

கோவை சிறுவன் - சிறுமி கொடூரக் கொலை சம்பவம்.... குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதிசெய்தது உச்சநீதிமன்றம்

புதுதில்லி:
கோவையில் பள்ளிச் சிறுவன்,சிறுமியை கடத்தி படுகொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை  உச்சநீதிமன்றம் உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது. கோவை ஒப்பனக்கார வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் ஜெயின் . ஜவுளிக்கடை அதிபரான இவருக்கு முஸ்கின் (வயது 11) என்ற மகளும் ரித்திக்  ( வயது 8) என்ற மகனும் இருந்தனர்.இவர்கள் இருவரும்  தனியார் வேனில் பள்ளிக்குச் செல்வது வழக்கம். இருவரையும்  2010-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதியன்று வழக்கம் போல வேனில் அழைத்துசென்ற வேன் ஓட்டுநரான மோகன்ராஜ் என்ற மோகன கிருஷ்ணன், பின்னர் ரஞ்சித்தை தொடர்பு கொண்டு, தான் குழந்தைகளை கடத்தி விட்டதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டினான். இது தொடர்பாக ரஞ்சித்குமார் அளித்த புகாரின் பேரில் கோவை வெரைட்டி ஹால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குழந்தைகளை தேடி வந்தனர். 

இந்நிலையில் பொள்ளாச்சி பி.ஏ.பி. வாய்க்காலின் கரையில், குழந்தைகள் இருவரின் பள்ளிப் பைகள், டிபன் பாக்ஸ் உள்ளிட்டவை கிடைத்தன. இதனைத் தொடர்ந்து மறுநாள் வாய்க்காலில் குழந்தை கள் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.போலீசாரின் விசாரணையில் குழந்தைகள் இருவரும் கடத்திக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதில் சிறுமி முஸ்கின் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மோகன் ராஜையும், உடந்தையாக இருந்த மனோகரனையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினரின் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது காவல் ஆய்வாளர் ஒருவரின் துப்பாக்கியை பறித்த மோகன்ராஜ் போலீசாரை சுட்டுவிட்டு தப்பிக்க முயன்ற போது போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தான்.

மனோகரன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். இந்த  வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம் மனோகரனுக்கு தூக்குத் தண்டனை விதித்தது. இதற்கு எதிரான மனோகரனின் மேல் முறையீட்டு மனுவை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மனோகரன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தான். இந்த மனுவை நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில் மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.