புதுதில்லி:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் நடைபெற்று வரும் கிளர்ச்சிப்போராட்டங்கள் குறித்து விவாதம் நடத்திட, எதிர்க்கட்சிகள் அளித்த அறிவிப்புகளுக்கு மாநிலங்களவைத் தலைவர் மறுப்புத் தெரிவித்ததன் காரணமாக,எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையை இன்று(செவ்வாய்க்கிழமை) நடத்தவிடவில்லை.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களில் பலர் நாடாளுமன்ற நடத்தை விதி 267ஆவது பிரிவின்கீழ் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசியக்குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக நாடு முழுதும் மக்கள் மேற்கொண்டு வரும் கிளர்ச்சிப் போராட்டங்கள் குறித்து அவையின் இன்றைய அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் என்று அறிவிப்பு கொடுத்திருந்தார்கள். ஆனால் மாநிலங்களவைத் தலைவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவை இன்றையதினம் நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாளை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம்,தேசியவாதக் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாநிலங்களவைத் தலைவரின் மறுப்புக்குத், தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதத்தில், பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தினார்கள்.அப்போது குலாம் நபி ஆசாத் (காங்கிரஸ்) சொல்லும்போது, குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடியுரிமைப் பதிவேடு ஆகியவை மட்டுமல்ல, தேசியமக்கள்தொகைப் பதிவேடும் பிரச்சனை யானதே என்றார்.“இதற்கு முன்பும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் மிகவும் சாதாரணமான கேள்விகள்தான் இருக்கும். ஆனால் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள கேள்வித்தாளில், அரசாங்கம் உங்களின் பெற்றோர் களின் பிறந்த தேதி மற்றும் இடத்தையும் தெரிந்துகொள்ள விரும்புகிறது. பாஜக இதனை இந்து-முஸ்லீம் பிரச்சனையாக சித்தரிக்கிறது. இது அப்பட்டமாகத் தவறாகும்,” என்று அவர் கூறினார்.குலாம் நபி ஆசாத்தும், தேசியவாதக் காங்கிரசைச் சேர்ந்த வந்தனா சவானும் தங்கள் பிறந்த நாள் சான்றிதழைத் தங்களால் அளித்திட முடியாது என்றும், தங்களுடைய பெற்றோரின் பிறந்த நாட்களும் தங்களுக்கு ஞாபகம் இல்லை என்றும் கூறினார்கள்.பாஜக ஆளும் மாநிலங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.“ஒட்டுமொத்த நாட்டு மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் அதேசமயத்தில், அரசாங்கமோ மக்களின் குரலைச் செவிமடுக்கவே மறுக்கிறது, துரதிர்ஷ்ட வசமாக கிளர்ச்சிப் போராட்டங்களை போலீசாரின் குண்டாந்தடிகளாலும், துப்பாக்கிக் குண்டுகளாலும் நசுக்கிட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்,” என்று சிபிஎம் உறுப்பினர் கே.கே. ராகேஷ் கூறினார்.“அரசாங்கம் ஈவிரக்கமின்றியும் கூருணர்வின்றியும் இருக்கிறது. நாடாளுமன்றம் என்பது மக்கள் பிரச்சனை குறித்துவிவாதம் நடத்தப்படுவதற்கான மிக உயர்ந்தஓர் அமைப்பாகும். இங்கே மக்கள் பிரச்சனையை எழுப்பி விவாதித்திட எதிர்க்கட்சி களுக்கு அனுமதி மறுக்கப்படுமானால், அது மிகவும் துரதிஷ்டவசமானதும், ஜனநாயக விரோதமானதுமாகும்,” என்று ஆனந்த்சர்மா (காங்கிரஸ்) கூறினார். (ந.நி.)