புதுதில்லி:
ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழுச் சம்பளம் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தொழில் நிறுவனங்களும் ஊழியர்களும் பேசிகொரோனா பரவலை தடுக்க, கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதன் முதலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் 29 அன்று மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில், நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தாலும், ஊழியர்களுக்கு முழு சம்பளமும் வழங்க வேண்டும். இவ்வாறு வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கவுல் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஊரடங்கை காரணம் காட்டி நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தற்காலிக உத்தரவுதான். ஆனால், இது கடந்த மார்ச் 25 முதல் மே 17 வரை, அதாவது 54 நாட்களுக்குதான் அமலில் இருந்தது. பின்னர் இது திரும்பப்பெறப்பட்டு விட்டது. அதன்பிறகு பணிக்கு திரும்பாத ஊழியர்களுக்கு நிறுவனங்கள் சம்பளம் வழங்க அவசியமில்லை’ என கூறியிருந்தது. இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்திருந்தனர்.அதன்படி இரு தரப்பினரின் எழுத்துப்பூர்வ வாதங்களும் தாக்கல் செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமையன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, தொழில் நிறுவனங்களுக்கு எதிராக எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருப்பதாகவும், அந்த உத்தரவு நீடிக்கும் என்றும் நீதிபதி பூஷன் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் மத்திய அரசு ஜூலை கடைசி வாரத்தில் விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை தொழில் நிறுவனங்கள் மீதான நடவடிக்கையையும் நிறுத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொழில் நிறுவனங்களும் ஊழியர்களும் ஒருவருக்கொருவர் பேசி முடிவெடுக்க அறிவுறுத்தினர். ஒரு வேளை பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை எனில் தொழிலாளர் நலத்துறையை அணுக வேண்டும் என்றும் தொழிலாளர்கள் இன்றி எந்த ஒரு தொழிற்சாலையும் இயங்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.வழக்கின் விசாரணை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.