புதுதில்லி:
நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான சம்பளத்தை வாங்கப் போவதில்லை என்று, நீதிபதி ரஞ்சன் கோகோய்திடீரென அறிவித்துள்ளார்.ஆதாயத்திற்காகவே, ஆளுங்கட்சியை அனுசரித்துப் பதவி பெற்றார் என்றுவிமர்சனங்கள் எழுந்ததால், ‘சம்பளத்தை வாங்க மாட்டேன்’ என்று ரஞ்சன் கோகோய் திடீரென வீராப்பு காட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில ஏடு ஒன்றுக்கு கோகோய் பேட்டி அளித்துள்ளார். அதில், “நான் வழங்கிய தீர்ப்புகளுக்காக மாநிலங்களவை எம்.பி.பதவி கிடைத்ததாக என்னை விமர்சனம்செய்கிறார்கள். பரிசுபெற நான் நினைத்திருந்தால், நிறைய வருமானம் வரும்-செல்வம் கொழிக்கும் பதவியை அல்லவா கேட்டிருப்பேன்.மாறாக, முன்னாள் நீதிபதிக்கு வழங்கப்படும் ஓய்வூதிய அளவிற்கே ஊதியம் கிடைக்கும் எம்.பி. பதவியை ஏன் கேட்க வேண்டும்?” என்று கோகோய் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “இந்த பதவியில் எனக்குக்கிடைக்கும் சம்பளம் மற்றும் அலவன்சை நான் வாங்கப்போவது இல்லை. சிறு நகரங்களில் உள்ள சட்டக்கல்லூரிகளின் நூல் நிலையங்களை மேம் படுத்த இந்த சம்பளத்தைக் கொடுத்து விடுவேன்” என்று அவர் கூறியுள்ளார்.