புதுதில்லி:
சீனப் பொருட்கள் இறக்குமதியைத் தடை செய்வது இந்தியாவுக்கே பாதிப்பாக முடியும் என்று பொருளாதார வல்லுநரான சுவாமிநாதன் ஐயர் எச்சரிக்கை செய்துள்ளார்.அண்மையில் ‘எக்னாமிஸ் டைம்ஸ்’ பத்திரிகைக்கு சுவாமி நாதன்ஐயர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எல்லையில் பிரச்சனை செய்யும் சீனாவுக்கு கடுமையான ஒரு பதிலை கொடுக்க வேண்டும்தான். ஆனால் அது இறக்குமதி தடை மூலமாக அல்ல.முதலில், எதை தடை செய்ய முடியும். எதையெல்லாம் தடை செய்ய முடியாது என்பது தெரிந்துக் கொள்ள வேண்டும்.சீனாவின் செயலிகள், பட்டங்கள், மெழுகுவர்த்திகள், கடிகாரம், பொம் மைகள் உள்ளிட்டவற்றை தடை செய்வதில் பெரிதும் பிரச்சனை இல்லை.ஏனெனில் இதுபோன்ற நடவடிக்கைகள் இங்கு நுகர்வோர் விலையை அதிகரிக்காது. வேறு வழிகளில் இதே போல விலைகளில் இந்தியாவிலேயே பொருட்கள் கிடைக்கின்றன.ஆனால் இந்தியா மெஷினரி மற்றும்இடைநிலை பொருட்களை தடை செய்தால் அது இந்திய பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும். ஏனெனில் அதனை சீனாவின் விலையில் கொடுக்க யாரும் இல்லை. இந்தியா இல்லையென்றால் வேறுநாட்டிற்கு அதனை சீனா விற்பனை செய்து கொள்ள முடியும். ஆனால் சீனமெஷினரி மற்றும் இடைநிலை பொருட்கள் கிடைக்காவிட்டால், அது இந்திய நலன்களுக்கு பாதிப்பாக அமையும். இந்தியாவும் சீனாவும் வர்த்தக மற்றும்பொருளாதாரத்தின் பல துறைகளில் பிரிக்க முடியாதவை.
நுகர்வோர் பொருட்கள் இறக்குமதியில் முன்பின் இருக்கலாம். ஆனால் மூலதன பொருட்கள் அல்லது இடைநிலை பொருட்கள் தடை கட்டத்திற்கு இந்தியா போகக் கூடாது.உதாரணமாக, மற்ற ஆசிய நாடுகளை எடுத்துக் கொண்டால், வங்கதேசம், வியட்நாம், லாவோஸ், கம் போடியா ஆகியவை சீனாவுடன் கசப்புடன் கூடிய வரலாற்றையே நீண்ட காலமாக கொண்டுள்ளன. எனினும் அவர்கள் ஒரு போதும் சீனப் பொருட்களை தடை செய்யவில்லை. சீனாவின் மின் சாதனங்கள், பேட்டரிகள், சோலார் பேனல்கள் இல்லாமல், இந்தியாவால் பெரியளவில் இந்த துறையில் செல்ல முடியாது. எனவே, சீனாவுடன் போட்டிக்குச் சென்றால், இந்தியாதான் அதன் நிலையை இழக்கும். இவ்வாறு சுவாமிநாதன் ஐயர் கூறியுள்ளார்.