புதுதில்லி:
பாஜக தலைவர்களான அனுராக் தாகூர், பர்வேஷ் ஷர்மா ஆகியோரின் வெறுப்பை உமிழ்ந்த பேச்சுக்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்ய வேண்டும் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தாக்கல்செய்திருந்த மனுவின் மீது முடிவு செய்து அறிக்கை அளிக்குமாறு தில்லி உயர்நீதிமன்றம், கீழமை நடுவர் மன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தில்லி, ஷாஹீன்பாக்கில் நடைபெற்றுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தையொட்டி பாஜக தலைவர்கள் அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் ஷர்மா ஆகியோர் வெறுப்பைக் கக்கிய பேச்சுக்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்ய வேண்டும் என்று பிருந்தா காரத் வழக்கு தொடுத்துள்ளார்.தில்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோரடங்கிய அமர்வாயம் முன்பிருந்தா காரத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இது தொடர்பாக தில்லியில் உள்ள ஒருடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் நடுவர் எவ்வித முடிவும் எடுக்காது இருப்பதைச் சுட்டிக்காட்டி அவருக்கு உரிய கட்டளையைப் பிறப்பித்திட வேண்டும் என்று வலியுறுத்தினார்.இக்கோரிக்கையை ஏற்று நீதிபதிகள், பிருந்தா காரத்தின் மனுவின்மீது சட்டப்படியும், விதிகளின்படியும் இந்த வழக்கில் அரசாங்கத்தின் கொள்கைப்படியும் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தீர்மானித்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறைக் கலகங்கள் குறித்து எண்ணற்ற மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் அனைத்தையும் ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது.(ந.நி.)