tamilnadu

img

வறுமைக்கோட்டுக்கு மேல், கீழ் எனும் கணக்கெடுப்பு மோசடியானது

விவசாய தொழிலாளர்கள், ஏழை எளிய குடும்பங்கக்கு ஏற்கனவே அரசுஅமல்படுத்தி வரும் பல நலத்திட்டங்களை இந்த அரசுகள் வெட்டி சுருக்குகிறார்கள். குறிப்பாக எல்லாருக்கும் ஒரே மாதிரி ரேசன் அட்டை என்னும்முறைதான் இருந்தது. ஆனால் தற்போது மத்திய அரசு முன்னுரிமைஉள்ள குடும்பங்கள், முன்னுரிமை அற்ற குடும்பங்கள் என பிரித்துள்ளது. முன்னுரிமை உள்ள குடும்ப அட்டைக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கவேண்டும், முன்னுரிமை அற்ற குடும்ப அட்டைக்கு ரேசன் பொருட்களை குறைக்க வேண்டும் என மத்திய அரசுகூறுகிறது. ஆனால் வசதியான குடும்பங்கள் முன்னுரிமை குடும்பங்கள் என்றும், பல வசதியற்ற ஏழைகுடும்பங்கள் முன்னுரிமை அற்றகுடும்பங்கள் என தவறாக கணக்கெடுத்துள்ளனர். கணிசமான ஏழை எளிய, விவசாய குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட ரேசன் பொருட்கள் குறைக்கப்படுகிறது. குடும்ப அட்டைதாரர்களை முன்னுரிமை குடும்பம், முன்னுரிமை அற்ற குடும்பம் எனவஞ்சிக்கக்கூடாது. சாதாரண தொழிலாளர் குடும்பங்களை வஞ்சிப்பதை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 15 வருடங்களுக்கு முன்புஎடுக்கப்பட்ட தவறான கணக்கெடுப்பை வைத்துக் கொண்டு இன்றைக்கு, தகுதியுள்ள விவசாய தொழிலாளர், ஏழை எளிய குடும்பங்களுக்கு, கூலி தொழிலாளி குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகையை மத்திய மாநில அரசுகள் மறுத்து வருகின்றன. அப்படி மறுக்கக்கூடாது. வறுமைகோட்டுக்கு கீழ், வறுமைக்கோட்டுக்கு மேல் என்ற மோசடி கணக்கெடுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். 

புறம்போக்கு நில வீடுகள்
மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் ஏழை எளிய விவசாய குடும்பங்களை சார்ந்தவர்கள் புறம்போக்கு இடங்களில், நீர் நிலை புறம்போக்கு நிலங்களில் குடிசை போட்டு பல தலைமுறைகளாக வசித்து வருகிறார்கள். அவர்களை அரசு அப்புறப்படுத்த முயற்சித்து வருகிறது. குடிசை மாற்று வாரியம் மூலம் நகர்ப்புறங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள் ஏற்படுத்தி வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். கிராமப்புறமாக உள்ள வீடற்றவர்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும். குமரி மாவட்டத்தில் அரசு புறம்போக்குகள் இல்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அரசு பதில் அளித்துள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களில், கிராமங்களில், ஊராட்சிகளில் வசதி படைத்த பணக்காரர்கள் பல ஏக்கர் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவில்லை என்றால், யார் யார் எங்குபுறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளனர் என நாங்கள் பட்டியல் தருகிறோம். அந்த இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வீடற்றவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். ஒரு வேளை அந்த ஆக்கிரமிப்புகளை அரசு கைப்பற்ற மறுத்தால் நாங்கள்அந்த இடங்களை கைப்பற்றி வீடற்றவர்களுக்கு வழங்குவோம். முதியோர் ஓய்வூதியம், விதவைகள் பென்சன் உள்ளிட்ட நலத்திட்டங்கள் சமீப காலமாக வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம், விதவைகள் பென்சன் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்த போது, நூறு நாள்வேலை திட்டத்தை கொண்டுவர வைத்தது செங்கொடி இயக்கம். அப்படி கொண்டு வந்த திட்டத்தை மத்திய பாஜக அரசு அமலாக்காமல் முடக்கி வருகிறது. 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கும் பல நாள் சம்பளம் பாக்கி வைக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக அமல்படுத்தி, சம்பள பாக்கி உள்ளவர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும். மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கோடி கோடியாக சலுகை வழங்குகிறார்கள். ஆனால் நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு இந்த அரசு எந்த சலுகைகளும் வழங்கவில்லை. ஏழை எளிய மக்களின் கோரிக்கைகளை அரசுநிர்வாகம் ஏற்க மறுத்தால் செங்கொடிஇயக்கத்தின் சார்பாக மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்துவோம். மத்திய அரசின் எடுபிடி அரசாக மாநில அரசு செயல்படாமல் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். 

நாகர்கோவில் ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற விவசாயத் தொழிலாளர் போராட்டத்தில்  சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்  பேசியதிலிருந்து...