articles

img

தென்பரை முதல் கைக்கோளப்பாளையம் வரை....

கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பொறுத்தவரையில் மாநாடு என்பது தலைவர்களின் உரையை மட்டும் கேட்டுச் செல்கிற  நிகழ்வல்ல. கடந்த மாநாட்டிற்குப் பிறகு உருவாகியுள்ள அரசியல்-சமூகச் சூழல்கள், நடந்த பணிகள், கிடைத்த அனுபவங்கள், ஏற்பட்ட முன்னேற்றங்கள், நிகழ்ந்த பின்னடைவுகள், தோழர்களின் பங்களிப்புகள் ஆகியவற்றை மனம் திறந்து ஆய்வு செய்கிற இடம் மாநாடு.

கட்சியின் அடிப்படை அலகாகிய உள்ளூர்க் கிளை முதல், பகுதிகள், வட்டங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள் என அனைத்து மட்டங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, நிறைவாக நாடு தழுவிய அளவிலான மாநாட்டில் செறிவான விவாதங்களுடன் அடுத்த கட்ட நகர்வுகளுக்கான அரசியல் முடிவுகளும் அமைப்புசார் வழிகாட்டல்களும் வகுக்கப்படும். பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய பொறுப்பாளர்கள், குழுக்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்;  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாடு வருகிற 2022 ஏப்ரல் மாதத்தில் கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. கட்சியின் அமைப்புச் சட்ட விதிகளின்படி அகில இந்திய மாநாட்டிற்கு முன்னதாக கட்சியின் கிளை மாநாடுகள், இடைக்குழு  மாநாடுகள், மாவட்ட மாநாடுகள், மாநில மாநாடுகள் நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் தற்போது கிளை மாநாடுகளும்,  இடைக்குழு மாநாடுகளும் நடைபெற்று வருகின்றன.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சி ஜனநாயக மரபை எடுத்துக்காட்டும் சிறந்த வடிவங்களாக இந்த மாநாடுகள் திகழ்கின்றன.  சமீபத்தில் நடைபெற்ற இரண்டு கிளை மாநாடுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கோவை மாவட்டத்தில் எஸ்.எஸ்.குளம் இடைக்குழுவிற்கு உட்பட்ட கைக்கோளபாளையம் கிராமத்தின் கிளை மாநாட்டிலும், திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்பரை கிராமத்துக் கிளை மாநாட்டிலும் அந்தந்த மாவட்டத் தலைவர்களோடு  கலந்து கொண்டேன். தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் இந்த இரண்டு கிராமங்களுக்கும் முக்கியமான பங்குண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டத்தில் முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளை 1938ஆம் ஆண்டு கைக்கோளபாளையத்தில் துவங்கப்பட்டது. 1940களின் துவக்கத்தில் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் விவசாயிகள் சங்கத்தினுடைய கொடியை முதன்முதலாக தென்பரை கிராமத்தில் தோழர் பி.சீனிவாசராவ் ஏற்றினார். இந்த இரண்டு கிராமங்களிலும் இப்போதும் செங்கொடி இயக்கம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துடிப்போடு செயல்பட்டு வருகிறது.

தென்பரை
தமிழகத்தில் இக்கிராமத்தில் 1943இல்முதன்முதலாக விவசாய சங்கத்தினுடைய கொடியை ஏற்றியதோடு அமைப்பையும் துவக்கினார் பி.சீனிவாசராவ். இக்கிராமத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகவும், பண்ணையடிமை முறை ஒழிப்பிற்காகவும் துவங்கிய போராட்டப் பின்னணியில் உருவான கம்யூனிஸ்ட் இயக்கம் கீழத்தஞ்சை முழுவதும் பரவிய வலுவான இயக்கமாக (இன்றைய நாகை, திருவாரூர் மாவட்டங்கள்) வளர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்போதும் செயல்முனைப்போடு இயங்கி வருகிறது.

அக்காலத்தில் தென்பரையில் சுமார் 600 குடும்பங்கள் இருந்தன. இதில் சுமார் 50 தலித் குடும்பங்கள். தலித் அல்லாதவர்களில் பெரும்பகுதியினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள்.தென்பரை கிராமத்தில் சுமார் 362 வேலி நிலம் (1 வேலி = 6.5 ஏக்கர்). ஆரம்பத்தில் ரெட்டை ராயர் குடும்பத்திடம் இருந்தது. பின்னர், இந்த நிலங்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்த உத்திராபதி மடத்தின் வசம் மாறியது. கிராமத்தின் அனைத்துக் குடும்பங்களுமே குத்தகைதாரர் களாக அல்லது பண்ணையாட்களாக நிலத்தில்உழைத்து வந்தனர். குத்தகைதாரர் விளைச்சலில் முக்கால் பங்கிலிருந்து ஐந்தில் நான்கு பங்கு வரை குத்தகையாகவோ, வாரமாகவோ பண்ணையாருக்கு தர வேண்டும்.

விளைச்சலில் மூன்றில் இரண்டு பங்கைக் குத்தகை சாகுபடிதாரர்களுக்கு அளித்திட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தது. விவசாயிகள் அந்தக் கோரிக்கையை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தித் திரள, மடம் ஆத்திரப்பட்டது.  தென்பரை விவசாயிகள் சங்த்தின் செயலாளரும், குத்தகை விவசாயியுமான வீராசாமி நிலத்திலிருந்து  விரட்டப்பட்டார்.  தோழர் பி.சீனிவாசராவும் சங்கத்தின் மற்ற தலைவர்களும் தென்பரைக்குச் சென்றார்கள். விவசாயிகளின் போராட்டத்தைத் தொடங்கினார்கள். தலித்மக்களும் தலித் அல்லாத மக்களும் ஒன்றாக இணைந்து போராடினார்கள். கிராமத்தில்  சங்கத்தை அனுமதிப்பதைவிட பயிர்கள் வயலிலேயே கருகுவது நல்லது என்று மடமும் மற்ற பண்ணைகளும் கூறினர். முதன்முதலாக மடத்தின் உத்தரவை மீறி விவசாயிகள் நெல்லை அறுத்து கதிரடித்து பண்ணையின் பங்கை கதிரடித்த களத்திலேயே போட்டுவிட்டு எடுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டார்கள்.  அறுவடை செய்யப்பட்ட மொத்த நெல்லையும்  வயலிலேயே தீ வைத்து அழிக்கத் திட்டமிட்டிருந்த பண்ணையார்கள் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது. அடியாட்களால்  வீராசாமி தாக்கப்பட்டார். வீடு தீக்கிரையாக்கப்பட்டது. மோதல் நடந்தது. முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சங்கத்தின் சார்பில் அ.அமிர்தலிங்கம், களப்பால் குப்புசாமி, ராஜகோபால் ஆகியோரும், பண்ணையார்கள் சார்பாக வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார், திருக்களார் மடாதிபதி ஆகியோரும் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி பண்ணையாட்களுக்கு கூலி உயர்வு கிடைத்தது.  குத்தகைதாரர்கள் பண்ணையாரின் களத்தில் அல்லது தம் சொந்தக் களத்தில் கதிரடிக்கும் உரிமை கிடைத்ததோடு விளைச்சலில் மூன்றில் இரண்டு பங்கு குத்தகைவிவசாயிகளுக்கு கிடைத்தது.  விவசாயிகள் போராட்டம் வெற்றி பெற்றது.

அடுத்தடுத்து காட்டுத்தீ பரவுவது போல் கீழத்தஞ்சையில் பெரும்பான்மையான கிராமங்களில் விவசாயிகள் சங்கக் கொடியும், கம்யூனிஸ்ட் கட்சி கொடியும் உயர்ந்து பறந்தன. ஒப்பீட்டளவில் கீழத்தஞ்சையில் தீண்டாமைக்கொடுமையும் ஒழிக்கப்பட்டது. இத்தகைய மகத்தான இயக்கத்திற்கு தோழர் பி.சீனிவாச ராவ் தலைமையேற்று வழிகாட்டினார். 1980களில்கட்சியின் விவசாய சங்கம் நடத்திய இயக்கத்தின்விளைவாக உத்திராபதி மடத்துக்குச் சொந்தமான நிலங்களை சாகுபடி செய்த குத்தகை விவசாயிகளுக்கே கிரையம் செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அந்தத் தென்பரை கிளை மாநாட்டில் மாவட்ட தலைவர்களோடு நானும் கலந்து கொண்டேன். தற்போது தென்பரை கட்சி கிளையில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தைச் சார்ந்த இரண்டு பகுதி தோழர்களையும் உள்ளடக்கிய 19 உறுப்பினர்களை கொண்ட கட்சி கிளை இயங்கி வருகிறது. தோழர் சேகர் கிளைச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கிளை உறுப்பினர்களுக்கு வேலைப் பிரிவினையும் செய்யப்பட்டது. எதிர்காலத்தில் இக்கிளையை இரண்டாக பிரிப்பதென்று மாநாடு முடிவு செய்துள்ளது. கிராமத்தில் விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட வர்க்க, வெகுஜன அமைப்புகளை பலப்படுத்துவது என மாநாடு முடிவு செய்துள்ளது.

எந்திரமயமாகும் விவசாயம்
தற்போது தென்பரை கிராமத்தின் மக்கள் தொகை 4131. நவீன தாராளமய பொருளாதார கொள்கை அமலாக்கம் துவங்கிய பிறகு மற்ற துறைகளில் ஏற்பட்ட மாற்றத்தைப்போல் விவசாயத்திலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கீழத்தஞ்சையில் பெரும்பான்மையான கிராமங்களில் நெல் சாகுபடி இயந்திரமய மாகிவிட்டது. உழவு, நடவு, களை எடுத்தல், அறுவடை மற்றும் அடித்தல் அனைத்திற்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் விவசாய வேலையை நம்பியிருக்கக் கூடிய நிலமற்ற விவசாய தொழி லாளர்களுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் விவசாயக் கூலி வேலை நாட்கள் வெகுவாக குறைந்துவிட்டன. இதனால் தென்பரை உள்ளிட்ட பெரும்பான்மையான கிராமங்களில் விவசாயத் தொழிலாளர்களும், ஏழ்மையான விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவில் விவசாயம் அல்லாத வேறு வேலைகளுக்குச் செல்கின்றனர்.கீழத்தஞ்சை பகுதியில் மட்டுமல்ல.. பொதுவாகவே நாடு தழுவிய அளவில் நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகள் விவசாயத்தை நம்பி இருக்காமல் தாங்கள் வசிக்கும் கிராமங்களுக்கு வெளியே விவசாயமல்லாத வேறு வேலைகளுக்கு முறைசாரா தொழிலாளர்களாக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தென்பரையிலும் இதே நிலைமைதான். இத்தகைய கிராமப்புற ஏழைகளுக்கு வேலை, கல்வி, சுகாதார வசதி போன்ற அன்றாடத் தேவைகள் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளன. அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டது. இத்தகைய சூழலில்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதையும் மோடி அரசாங்கம் சீரழித்து வருகிறது.

மாறியுள்ள புதிய சூழலுக்கு ஏற்ப, கிராமப்புற மக்களைத் திரட்டிட புதிய கோரிக்கைகளை உருவாக்கி இயக்கங்களுக்குத் திட்டமிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. விளைபொருக்கு நியாயவிலை, இடுபொருட்கள் விலையைக் கட்டுப்படுத்துதல் போன்ற கோரிக்கைகளோடு தென்பரை கிராமத்தில் ஏற்பட்டுள்ளசமூகப் பொருளாதார மாற்றங்களை கணக்கிலெடுத்துக்கொண்டு கிராமத்து மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட புதிய முழக்கங்களை உருவாக்கி போராடுவதென கிளை மாநாடு உறுதி ஏற்றுள்ளது.

கைக்கோளபாளையம்
கோவை மாவட்டத்தில் முதன்முதலாக உருவான இந்தக் கிளையில் கே.பி.ராமசாமி, வெங்கடாச்சலம், ராமையன், ஆ.சின்னய்யன், பி.சுப்பையன் உள்ளிட்ட பல தோழர்கள் இணைந்திருந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கைக்கோளபாளையம் கிளை அலுவலகமாக  ‘சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவகம்’  2005 நவம்பர் 6  அன்றுதிறக்கப்பட்டு  இயங்கி வருவது குறிப்பிடத் தக்கது.இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில்கோவையில் பஞ்சாலை தொழிலாளர்கள் போராட்டம் எழுச்சியுடன் நடந்து கொண்டிருந்த பின்னணியில் இக்கட்சி கிளை உதயமானது. அடுத்தடுத்து கோவை நகரிலும் பல கிராமங்களிலும் பல கிளைகள் துவங்கப்பட்டு கம்யூனிஸ்ட் இயக்கமும், கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையிலான தொழிற்சங்க இயக்கமும் பலமான அமைப்புகளாக உருவாயின. கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட காலத்தில் கே.ரமணி, ஆர்.உமாநாத், பூபதி, கண்ணாகுட்டி போன்ற தலைவர்கள் தலைமறைவாக இயங்கிய போதுஅவர்களுக்கு இந்தக் கிளையும், கிராமத்து மக்களும் பாதுகாப்பளித்த பெருமையும் உண்டு.ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டம் ஆகியபகுதிகளிலும் கட்சிக் கிளைகளும், வர்க்க வெகுஜன அமைப்புகளும் உருவாயின. கோவை, திருப்பூர் பகுதிகளில் பஞ்சாலை மற்றும் இன்ஜினியரிங் தொழிலாளர் இயக்கமும், வால்பாறையிலும், நீலகிரி மாவட்டத்திலும்தோட்டத் தொழிலாளர்கள் சங்கங்களும், ஈரோட்டில் விவசாயிகள் சங்கமும் என  வலுவானஅமைப்புகளாக உருவாகி இயங்கி வருகின்றன.

1968ஆம் ஆண்டு வெண்மணியில் 44 தலித் விவசாய தொழிலாளர்களை நிலச்சுவான்தார்களும் அவர்களின் குண்டர்களும் உயிரோடு எரித்துக் கொன்ற கோரச்சம்பவம் நிகழ்ந்தபோது சின்னியம்பாளையம் பாரம்பரியத்தைக் கொண்ட 50,000 கோவை பஞ்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதியில் இறங்கிக் கண்டன இயக்கம் நடத்திய வரலாறும் இருக்கிறது.1978ஆம் ஆண்டு திருப்பூர் நகரத்தில் நடைபெற்ற வாலிபர் சங்க மாநில மாநாட்டிற்கு தியாகிகள் ஜோதியை ஏந்திச் சென்றது கைக்கோளபாளையம் தோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிஐடியு அமைப்பின் மாநிலக்குழு கூட்டம் 1991 ஆகஸ்ட் மாதம் 22, 23, 24 தேதிகளில் கைக்கோளபாளையம் கிராமத்தில் நடைபெற்றது.

தற்போது கைக்கோளபாளையத்தில் இரண்டு கட்சி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. 22 உறுப்பினர்களை கொண்ட (11+11) இக்கிளைகளில் 11 தோழர்கள் 40 வயதிற்குட்பட்டவர்கள். 1938இல் கிளைகள் தொடங்கிய போது இடம்பெற்ற தோழர்களின் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளும் தற்போது கட்சி உறுப்பினர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.  ‘தீக்கதிர்’ ஏட்டின் 6 படிகள் இக்கிளைத் தோழர்கள் வாங்குகிறார்கள்.வெள்ளனைப்பட்டி என்ற ஊராட்சிக்குஉட்பட்ட கைக்கோளபாளையம் கிராமத்தின்மக்கள் தொகை சுமார் 1,700. பாரம்பரியமான கட்சிக் கிளை உள்ள இக்கிராமத்தில் அக்காலத்தில் பிரதானத் தொழில் விவசாயம். தற்போது விவசாயத்தில் ஈடுபடும் குடும்பங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. கோவை மாநகரத்தின் எல்லையை அடுத்து இரண்டு கிலோ மீட்டருக்கு அருகில் இருக்கக்கூடிய புறநகர் பகுதியான கைக்கோளபாளை யத்தில் மாநகரில் பணியாற்றும் தொழிலாளர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் இப்பகுதியில் வசிக்கின்றனர். மேலும் சிறுகுறு தொழில்களும், வணிகங்களும் உருவான பின்னணியில் சாகுபடி செய்யப்பட்ட கணிசமான விளைநிலங்கள் கடைகளாகவும், குடியிருப்புகளாகவும் மாறிவிட்டன.

கிராம மக்களில் பெரும்பான்மையினர் முறைசாரா தொழிலில் ஈடுபடுபவர்களாகவும் மற்றும் ஆலைகளிலும், பல நிறுவனங்களிலும் வேலை செய்பவர்களாகவும் உள்ளனர். இத்தகைய சமூக பொருளாதார நிலைமைக்கேற்ற புதிய முழக்கங்களை உருவாக்கி மக்களை திரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென மாநாடு முடிவு செய்துள்ளது. மாநாட்டில் தோழர்கள் சுப்ரமணியம், மாணிக்கராஜ் ஆகியோர் இரு கிளைகளின் செயலா ளர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.கடந்த 83 ஆண்டுகளாக உயிர்த்துடிப்போடு செயல்பட்டு வரும் இக்கிராமத்தில் வர்க்க, வெகுஜன அரங்கங்கள் மற்றும் கல்வி, விளையாட்டு போன்ற பணிகளுக்கு கட்சி உறுப்பினர்களுக்கு தனித்தனித் பொறுப்புகள் அளிக்கப்பட்டன. மனைப் பட்டா உள்ளிட்ட கிராமத்து மக்கள் பிரச்சனைகளின் மீது இயக்கம் நடத்திடவும் மாநாடு முடிவு செய்துள்ளது. தென்பரை மற்றும் கைக்கோளபாளையம் கிராமங்களில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக செங்கொடி இயக்கம் துடிப்போடு செயல்பட்டு வருகிறது. திட்டமிட்ட அணுகுமுறைகளும்  தொடர்ச்சியான செயல்பாடுகளும் தோழர்களின் முனைப்பான பங்களிப்புகளும் வேர்மட்டத்தில் இயக்கம் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழும் அமைப்புகளோடு இவ்விரண்டு கிளைகளையும் அடையாளப்படுத்துகின்றன என்றால் மிகையில்லை.

கட்டுரையாளர் : ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)