திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம்கொறுக்கை ஊராட்சியில் பலதலைமுறைகளாக வாழ்ந்து வரும் அனைத்து பிரிவு மக்களின் வீடுகளையும் அனுபவ இடங்களையும் நீதிமன்றஉத்தரவின்பேரில் அப்புறப்படுத்தக்கோரி திருத்துறைப் பூண்டி வட்டாட்சியர் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித் துள்ளனர்.
இது அப்பகுதி மக்களிடம் பெரும் கொந்தளிப்பை யும் பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள்நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர்.இதுகுறித்த விரிவான செய்தி கடந்த 19.8.2021 அன்று தீக்கதிர் நாளிதழில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அண்மையில் கட்சி ஊழியர்களின் குடும்ப திருமண விழாக் களில் பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் திருவாரூர் மாவட்டத்திற்கு வருகைதந்திருந்தார். திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களையும் சந்தித்தார்.
அப்போது கொறுக்கை ஊராட்சி மக்களும் போராட்டக்குழுவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பா.ஜானகிராமன், ஒன்றியகவுன்சிலர் கு.வேதரெத்தி னம் (சிபிஎம்), ஏ.மூர்த்தி (சிபிஐ), வை.செந்தில், பி.எம்.குப்புசாமி (அதிமுக) ஆகியோர் ஜி.ராமகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட அவர் “நீண்ட நாட்கள் குடியிருந்த இடத் தில் அரசுக்கு தேவையில் லாத பட்சத்தில் அந்த மனையை பட்டா செய்து வழங்கலாம் என அரசாணை உள்ளது. எனவே உங்களின் நியாயமான கோரிக்கையை தமிழக முதலமைச்சரை சந்தித்து எடுத்துக் கூறுவேன். அதன்மூலம் உங்கள் கோரிக்கை நிறைவேற வழி ஏற்படும்” என உறுதியளித்தார்.
இதனை கேட்ட கொறுக்கை ஊராட்சி மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது சட்டமன்ற உறுப்பினர் கே.மாரிமுத்து, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.என்.முருகானந்தம், சி.ஜோதிபாசு, தெற்கு ஒன்றிய செயலாளர் டி.வி.கார்ல்மார்க்ஸ், ஒன்றிய குழு உறுப்பினர் தலைக்காடு ரவி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.பி.ஜோதிபாசு ஆகியோர் உடனி ருந்தனர்.