புதுதில்லி:
ஜம்மு - காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடுகளை தளர்த்தி, மக்கள் சுதந்திரமாக வாழ வழிசெய்யுங்கள் என்று இஸ்லாமிய அறிவுஜீவிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.குவாஜா இப்திகார் அகமது, லெப்டினண்ட் ஜெனரல் ஜமீருதீன் ஷா (ஓய்வு), முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவின் மகன் டாக்டர் பர்வேஸ் அகமது மற்றும் மவுலானா ஆசாத், உருது பல்கலைக்கழகத் தலைவர் பிரோஸ் பக்த் உள்ளிட்ட 37 பேர் கையெழுத்திட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“இந்தியா ஒரு ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற நாடாக அதன் அரசியலமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. எந்தவொரு விதிவிலக்குமின்றி நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு சட்டமும் நம் அனைவரையும் கட்டுப்படுத்துகிறது. எவ்வாறாயினும், அந்த சட்டங்களில் மேலும் திருத்தங்கள் செய்யவும், அதே நாடாளுமன்றம் ஒரு நெறிமுறையுடன் அதற்கு இடம் அளிக்கிறது.
அந்த வகையில் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும், அதில் எந்த சமரசமோ அலலது சமாதானமோ செய்துகொள்ள வேண்டாம். அதேநேரம் பிரிவு 370 விதிகளை ரத்து செய்ததைத் தொடர்ந்து மாநிலத்தை மறுசீரமைப்பது ‘சமூகத்தின் ஒரு பிரிவில்’ அச்சத்தை எழுப்பியுள்ளது.இந்நிலையில், அரசாங்கம் அரசியல் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதோடு, அங்கு வாழும் மக்களின் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்த வேண்டுமென எங்கள் குழு விரும்புகிறது.நாங்கள் தேசிய நலனை கருத்தில்கொண்டே இவற்றை பேச வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். காஷ்மீர் மக்கள் சுதந்திரமாக சுவாசிப்பதற்கான ஜன்னல்கள் திறக்கப்பட வேண்டும். மக்களுக்கு உணவு, மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற மனிதாபிமான பிரச்சனைகளை நாங்கள் எழுப்பியுள்ளோம். அவர்கள் சுதந்திரமாக வாழ வகைசெய்ய வேண்டும். காஷ்மீரில் இப்போது உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். எந்தக் கட்டுப்பாடும் இருக்கக்கூடாது. காஷ்மீர் மக்களுடனான உரையாடல் அனைத்து மட்டங்களிலும் தொடங்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் விட மனிதநேயத்திற்கு மட்டுமே அங்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்.” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.