tamilnadu

img

பதம் பார்க்கும் கத்தி! - சி.ஸ்ரீராமுலு

நமது அரசியல் சாசனத்திற்கு விரோதமாக மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மற்ற மாநிலங்களை போன்று தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைமையிலான மதச் சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புக ளும் இஸ்லாமியப் பெண்களும் இரண்டு மாதகாலமாக அறவழியில் போராடி வருகின்றனர். இது தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது பெரும் ‘புயலை’ ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சிகளின் கேள்விக் கணைகளால் கதி கலங்கிய ஆளும் கட்சியினர், “இஸ்லாமியர்களுக்கு உண்மையான பாதுகாவலர்கள் நாங்க தான்” என்றனர். இது வெறும் ‘வாய்ச்சவடால்’ என்பதை உணர்ந்த அந்த மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். எங்கள் ஆட்சியில் இஸ்லாமியர்கள் ஒருவராவது பாதிக்கப்பட்டார்கள் என்பதற்கு ஆதாரம் கொடுக்க முடியுமா?” நிரூபிக்க முடியுமா? என்றும் ‘வாயால் வடை’ சுட்டனர். என்ஆர்சி-யை  தயாரித்து மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி நாட்டின் சமூக நல்லிணக்கம், பன்முகத் தன்மையை சிதைப்பதற்காக, அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து நாடு முழுவதும் என்பிஆர் கணக் கெடுப்பை மாநில அரசுகள் நடத்தவேண்டும் என்ற மத்திய பாஜக அரசின் உத்தரவு தமிழக சட்டப்பேரவை யில் மீண்டும் புயலை கிளப்பியது.

“என்பிஆர் பணிக்கான தற்போதைய படிவத்தில் இருக்கக்கூடிய கெடுபிடிகள் கடந்த காலங்களில் கிடையாது என்றும் தமிழகத்தில் மதச் சார்பின்மையை பாதுகாக்க என்பிஆர் பதிவேட்டை  பாஜக அரசு புதிதாக கேட்டிருக்கும் விவரங்களை தமிழகத்தில் சேகரிக்க மாட்டோம்” என்றும் மாநில அரசு உறுதி அளிக்க வேண்டும் என்று மார்ச் 11 ஆம் தேதி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. “கடந்த 2010 ஆம் ஆண்டின் என்பிஆர் படிவத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுடன் புதிதாக குடும்பத் தலை வரின் தாய், தந்தை, பிறந்த தேதி, இடம், பிறந்த தேதிக்கு  ஆவணங்கள், குடும்பத் தலைவர், குடும்பத்தில் உள்ள வர்களின் தாய்மொழி, வாக்காளர் அட்டை, ஆதார், பான்கார்டு, பாஸ்போர்ட், செல்பேசி என மூன்று கேள்வி களுக்கு விவரத்தை கூடுதலாக சேகரித்து தரும்படி மத்திய அரசு கேட்டிருப்பதால் இஸ்லாமிய மக்கள் அச்சப்படுகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் என்ன விளக்கம் தரவேண்டும் என்றுதான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். அந்தக் கேள்விகளை நீக்க வேண்டும் என்றோ தவிர்க்க வேண்டும் என்றோ கோரவில்லை.

ஒரு குறிப்பிட்ட மதம் குறித்து மட்டுமல்ல. அனைத்து சாதி, மதங்கள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தி விவரம் சேகரிக்கச் சொன்னார்கள். அதை செய்து கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கூறிய அமைச்சர் உதயகுமாரின் விளக்கம் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதாகத்தான் இருந்தது. அடுத்த நாள் (மார்ச் 12) தனது அலுவலகத்தில் அவசர அவசரமாக செய்தியாளர் களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், “என்பிஆர் கணக்கெடுப்பு பணிக்காக கேட்கப்பட்டுள்ள கேள்விகளில் உணர்வு சம்பந்தமான சில பிரச்சனைகள் இருப்பதால் இஸ்லா மிய மக்கள் அச்சப்படுவதாகக் கூறுகிறார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட, சதித் திட்டம் தீட்டி திட்டமிட்டு இஸ்லாமிய மக்களை பலிகடா வாக மாற்றி வருகிறார்கள்” என எதிர்க்கட்சிகள் மீது புழுதிவாரித் தூற்றினார்.

இஸ்லாமியர்களின் பண்டிகை நாட்கள் விடுபட்டு இருப்பது,2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்படாதது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, “மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வில்லை என்றால் திட்டங்களுக்கு நிதியை பெறுவது எப்படி? அளவீடு, மதிப்பீடு செய்வது எப்படி? எதிர்காலத் திட்டங்களை வகுப்பது எப்படி? என்ற கேள்விகளோடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விபரம் அரசு நிர்வா கத்திற்கு அத்தியாவசியமான தேவை என்றும் தற்போ தைய மத்திய அரசும் அதைத் தான் பின்பற்றுகிறது. இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது என்றும் மத்திய அரசுக்கு ‘வக்காலத்து’ வாங்கினார். அடுத்து, இஸ்லாமிய மக்களிடம் ஏற்பட்டிருக்கும் அச்சத்தைப் போக்குவதற்காக மத்திய அரசிடம் விளக்கம் கோரப்பட்டிருக்கிறது. அது வரைக்கும் என்பிஆர் பணிகள் தமிழகத்தில் நிறுத்தி வைக்கப் படுகிறது”என்றும் அமைச்சர் கூறினார். இது போராடும் மக்களை திசை திருப்புவதற்காக அரசும், ஆளும் கட்சியும்  திட்டமிட்டு அரங்கேற்றும் நாடகம் என்பது அடுத்த நாள் (மார்ச்13) அம்பலமானது.

உரிமை மீறல் என்பதை அறிந்து அமைச்சர் உதயகுமார் திடீரென்று செய்தியாளர்களை சந்தித்து, என்பிஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அறி வித்திருக்கிறார். அந்த கருத்தையே சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றுவதில் அரசுக்கு தயக்கம் ஏன்? என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், என்பிஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது என்பதையாவது பேரவையில் அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யதற்கு விளக்கம் அளித்த அமைச்சர்,“ மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் ஒரு சட்டத்துக்கு விரோதமாக மாநில அரசு எப்படி தீர்மானத்தை கொண்டு வரமுடியும்? என்றும் (தமிழகத்தில் என்பிஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது என்று செய்தியாளர்களிடம் கூறியதற்கு மாறாக) என்பிஆர் தொடங்கப்படவில்லை என்றும் ‘வார்த்தை ஜாலம்’ செய்ததன் மூலம் என்ஆர்சி, என்பிஆர் என்ற கத்தி மக்கள் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது.