திருச்சூர்:
கேரள மாநிலம் திருச்சூரிலுள்ள கோயில் ஒன்றில், பிராமணர்களுக்கு மட்டும் என்று வைக்கப்பட்டிருந்த கழிப்பறை பெயர்ப்பலகையை, அம்மாநில தேவசம் போர்டு அகற்றியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள பிரபல மகாதேவர் கோயிலுக்கு அரவிந்த் ஜி. கிரிஸ்டோ என்பவர் சென்றுள்ளார். அப்போது கோயிலுக்குவெளியே உள்ள கழிப்பறைகளில், ஆண்கள், பெண்கள் பயன்பாட் டுக்கு என்பதுடன், தனியாக பிராமணர்கள் பயன்பாட்டுக்கு என்றும்ஒரு கழிப்பறை இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அரவிந்த் ஜி, அதனைப் புகைப்படம் எடுத்து, தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டார். இந்த புகைப் படத்தைப் பார்த்த சமூகவலைதள வாசிகள், ‘பாகுபாடுகளை எவ்வளவு நாட்களுக்கு அனுமதிக்கப் போகிறோம்’ என்று பொங்கியெழுத்து விட்டனர்.
இதுபற்றி, தகவலறிந்த கேரள தேவசம் வாரியத் தலைவர் ஏ.பி. மோகனன், ‘பிராமணர்களுக்கு’ என்று எழுதப்பட்டிருந்ததை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திஅறிக்கைத் தாக்கல் செய்யவும் அதிகாரிகளுக்கு ஆணையிட்ட ஏ.பி. மோகனன், ‘மனிதர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையிலான இந்த நடைமுறை, 2003-ஆம் ஆண்டு முதலே அங்கு இருந்துள்ளதாகவும், கேரள தேவசம் வாரியத்தின் கீழ் உள்ள கோயில்களில் இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது’என்றும் கூறியுள்ளார்.