tamilnadu

img

அறிவுஜீவிகள் 49 பேர் மீது தேசத் துரோக வழக்கு புனைந்த அராஜகம்

புதுதில்லி:
“அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இஸ்லாமியர்கள், தலித்துக்கள் மீது, அடக்குமுறைகளும், கும்பல் தாக்குதல்களும் அதிகரித்து வந்த சூழலில், நாட்டின் புகழ்பெற்ற கலை இலக்கியத் துறையினர், திரையுலக பிரபலங்கள், அறிவியல் ஆய்வாளர்கள், மருத்துவத் துறை வல்லுநர்கள் என 49 பேர், கடந்த ஜூலை மாதம்பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினர்.அதில், கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான மற்றும் தனிநபர் உணவு உரிமைகள் மீதான தாக்குதல் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி இருந்தனர்.இதற்காக அவர்கள் 49 பேர் மீதும், பீகாரிலுள்ள சதார் காவல் நிலையத்தில் தற்போது,தேசத்துரோக பிரிவுகளில் முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடிதம் எழுதியவர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் உட்பட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அடூர் கோபாலகிருஷ்ணன்
அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, ஜனநாயக முறையில், அரசுக்கு எதிராக அல்லாமல்,அறிவுரை கூறும் வகையில்தானே நாங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினோம். இதற்காகவா எங்கள் மீது வழக்கு? இதை நம்பவே முடியவில்லை; என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்று மலையாள திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநரும், டிதத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவருமான அடூர்கோபாலகிருஷ்ணன் வேதனை தெரிவித் துள்ளார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் “நமக்கு (நாட்டிற்கு) என்ன ஆனது.. என்ன நடக்கிறது.. இந்த செய்தியை என்னால் இன்னும் கூட நம்ப முடியவில்லை. ஒரு சாதாரண கடிதத்தை வைத்து தேசதுரோக வழக்கைப் பதிவு செய்ய நீதிமன்றம்உத்தரவிடும் என்பதை என்னால் கற்பனைகூட செய்துபார்க்க முடியவில்லை. அந்தக் கடிதத்தை சரியாக படித்துப் பார்க்கவில்லையோ என்று நான் கருதுகிறேன். நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். ஒருஅரசு மீது விமர்சனம் வைத்தால் அது எப்படிதேச விரோத செயலாகும்? நமது ஜனநாயகத்தைமதித்து, அரசியல் சாசனத்தை மதித்துத்தான் அந்தக் கடிதத்தை நாங்கள் எழுதினோம். அந்தக்கடிதத்தில் உள்ளவை பல்வேறு கருத்துக்களின் தொகுப்புதான். அரசை எதிர்த்து நாங்கள் எழுதவில்லை. ஜனநாயகத்தை மதித்துதான் எழுதினோம். நாம் வாழும் ஜனநாயக நாட்டில் பல்வேறு விதமான கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். அவற்றைத் தொகுத்துத்தான் அரசிடம் கொண்டுசென்றோம். நாங்கள் கலைஞர்கள்.. எங்களுக்கு அரசியல் தேவையில்லை. எங்களது கோரிக்கையை, எண்ணத்தை தேசத் துரோகமாக பார்த்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்த நாட்டில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கும் வரை, ஜனநாயகம் இருக்கும்வரை, இந்த நாட்டை வழிநடத்தும் தகுதி, பங்குஎங்களுக்கு இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். கருத்துப் பரிமாற்றம் இல்லாமல் ஜனநாயகம் இல்லை. கருத்து வேறுபாடு இல்லாவிட்டால் அது ஜனநாயகமே அல்ல. ஒருவர் கொடூரமாக கொல்லப்படுகிறார். ஏழை மக்கள் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள். அடித்துக் கொல்லப்படுகிறார்கள். பசு மாட்டைக் கொல்லப்போவதாக சந்தேகித்துக் கொல்லப்படுகிறார். இதையெல்லாம் நாங்கள் புதிதாக கண்டுபிடிக்கவில்லை. நம் கண் முன்பாகவே எல்லாம்நடக்கின்றன. ஆனால் யாரும் கவனிக்காமல் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தி
“இந்த நாட்டில் என்ன நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். இது ஒன்றும் ரகசியம் கிடையாது. உண்மையில், இந்த உலகம் முழுவதற்குமே இது தெரியும். யாரேனும் பிரதமருக்கு எதிராக கருத்து
கூறினாலோ, அல்லது அரசுக்கு எதிராக யாரேனும் பேசினாலோ அவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்; ஊடகங்கள் முடக்கப் படுகின்றன என்றால், எதேச்சதிகாரத்தை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது என்றேஅர்த்தம். அது தெளிவாகத் தெரிகிறது” என்றுகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.“இந்த தேசத்தில் 2 விதமான சித்தாந்தங் கள் இருக்கின்றன. ஒன்று இந்த தேசத்தை ஒருமனிதர், ஒரு சித்தாந்தம் ஆள வேண்டும்; மற்றவர்கள் வாய்மூடி இருக்க வேண்டும் என்பது. மற்றொன்று அவ்வாறு இருக்க முடியாது; இந்ததேசத்தில் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட பார்வைகள், வேறுபட்ட மொழிகள், கலாச்சாரங்கள், கருத்துகளைத் தெரிவிப்பதில் வித்தியாசமான கோணங்கள் இருக்கின்றன; அந்தக்குரல்களை நசுக்கக் கூடாது என்ற காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சிகளின் சிந்தாந்தம்” என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

பிரகாஷ் ராஜ்
இதேபோல நடிகர் பிரகாஷ் ராஜ் அளித்துள்ள பேட்டியில், “கடிதம் எழுதியஆளுமைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது திகைப்பை ஏற்படுத்துகிறது. சமூகத்தில் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கே இந்தநிலை என்றால் உதவியற்றவர்களின் நிலையும்அடித்தட்டு மக்களின் நிலையும் என்னவாக இருக்கும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.“மோடி ஒரு நாட்டின் தலைவரான பிறகுஅவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதை நிறுத்த வேண்டும். அவர் இருதரப்பின் கருத்துகளையும் கேட்க வேண்டும்.மாறாக, இது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சமுதாயத்தில் அச்சத்தை தூண்டுகிறார்” என்று பிரகாஷ் ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.“கேள்வி கேட்பதால் எங்களைப் போன்றவர்களையே நீதிமன்றங்களில் நிறுத்துவார்கள் என்றால் வேறு யாரும் உண்மையை பேச முன்வர மாட்டார்கள்” என்றும் கூறியுள்ளார்.