‘அமேசானும், ஃப்ளிப்கார்ட்டும் சாதனை அள வுக்கு விற்பனை செய்துள்ளன, மக்களிடம் அவ்வளவு பணம் இருக்கிறது, ஆனால் பொருளாதார மந்தம் என்று புலம்புகிறார்கள்!’ என்பது, ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசிகள் கடைசியாக மேற் கொண்டுள்ள பரப்புரை! இதற்கு விளக்கமளிப்பதற்கு முன்பாக, மற்றொன்றிற்கு விளக்கமளிக்க வேண்டியது அவசியமாகிறது. ஒருமுறை தந்தை பெரியாரிடம், ‘எப்பொழுது பார்த்தாலும் கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று கூறிக்கொண்டிருக்கிறீர்க ளே, திடீரென்று கடவுள் உங்கள்முன் வந்தால் என்ன செய்வீர்கள்?’ என்று ஒருவர் கேட்டாராம். ‘அப்படி வந்து விட்டால், கடவுள் இருக்கிறார் என்று சொல்லிவிட்டுப் போ வேன்’, என்றாராம் பெரியார். பெரியாரே சொன்னதுபோல, மோடியுடன் நமக்கென்ன வரப்புத் தகராறா, அவரால் வளர்ச்சி வந்தால் ஏற்க மாட்டேன் என்று சொல்ல? நாய் விற்ற காசு குரைக்காது, மீன் விற்ற காசு நாறாது என்பதைப் போல, வளர்ச்சி யாரால் வந்தாலும், ஏற்பதில் எந்தச் சங்கடமும் நமக்கு இல்லை.
முதலாளிகள் சொன்னது
வளர்ச்சி இல்லை, பொருளாதாரம் மந்தமாக இருக்கி றது என்று முதலில் சொன்னவர்கள் இடதுசாரிகள் அல்லர். இந்திய நாட்டின் மிகப்பெரும் தொழிலதிபர்கள்தான் அதைக் கூறினார்கள். இடதுசாரிகளுக்காவது, மோடியை எதிர்க்க வேண்டியது அவசியமாக இருக்கலாம், தொழிலதிபர்க ளுக்கு என்ன அவசியம்? செப்.20 அன்று, ஆண்டுக்கு ரூ.1.45 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுமளவுக்கு, நிதியமைச்சர் வரிச்சலுகைகளை ஏன் அறிவிக்க வேண்டியதாயிற்று? அந்தச் செய்தியை வெளியிடும்போதுகூட, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி தொடர்ச்சியாக 5 காலாண்டுகள் சரிந்ததால் வரிச் சலுகை என்றுதானே வணிக இதழ்கள்கூட எழுதின? அந்த வரிச்சலுகைகளால்தான், அமேசானிலும், ஃப்ளிப்கார்ட்டிலும் இவ்வளவு விற்பனையாகிவிட்டது என்றுகூடச் சொல்வார்கள் போலிருக்கிறது. ஏனென்றால், திரைப்படம் பார்க்கச் செலவு செய்கிறார்கள் என்று திரித்த வர்கள்தானே இவர்கள்? போகிற போக்கைப் பார்த்தால், வேட்டி கட்டியிருக்கிறார்கள், சட்டை போட்டிருக்கிறார்கள், காசில்லை என்றால் கோவணத்துடன்தானே திரிந்தி ருப்பார்கள் என்று கேட்பார்கள் போலிருக்கிறது.
எவ்வளவு கூடுதல் விற்பனை?
அப்படி எவ்வளவு விற்பனையாகிவிட்டது இணையக் கடைகளில்? கடந்த ஆண்டு விழாக்காலச் சிறப்பு விற்ப னையைவிட 50 சதவீதம் கூடுதல் விற்பனையாகியிருப்பதாக ஃப்ளிப்கார்ட், அமேசான் ஆகியவை தெரிவித்துள்ளன. ஆனால், அவர்களே தெரிவித்துள்ள பிற தகவல்களை யும் கவனிக்க வேண்டியுள்ளது. மெட்ரோ அல்லாத நகரங்களி லிருந்து புதிய வாடிக்கையாளர்கள் சேர்வது மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக அமேசானின் இந்தியத் தலைவர் அமித் அகர்வால் தெரிவித்துள்ளார். புதிய வாடிக்கையாளர்க ளில் 88 சதவீதம் பேர் சிறிய ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்றும், 15 ஆயிரம் அஞ்சல் குறியீடு(பின் கோடு)களின்கீழுள்ள புதிய ஊர்கள், பிரைம் சேவைக்கு இணைந்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்தியாவின் 99.4 சதவீத பின்கோடு களில் இருந்து மக்கள் பொருட்களை வாங்கியிருப்பதா கவும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது, ரூ.19 ஆயிரம் கோடிக்கான வியாபாரத்தை, இந்த இரு நிறுவனங்களும், இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் சென்று - செல்லா மலேயே! - செய்துவிட்டன என்பதுதான் உண்மை.
வளர்ச்சி இல்லையா?
50 சதவீதமென்றாலும், ரூ.19 ஆயிரம் கோடியென்றா லும் வளர்ச்சி வளர்ச்சிதானே என்று கேட்கலாம். ஆனால், இது இந்த இணையக் கடைகளின் வளர்ச்சியே தவிர உண்மை யில் வளர்ச்சி அல்ல. ஒரு ஊரில் பல கடைகள் இருக்கும்போது, ஒவ்வொன்றின் விற்பனை அளவினை சந்தைப் பங்கு என்று குறிப்பிடுவார் கள். அவ்வாறு, இந்தியாவின் சந்தைப் பங்கில், சிறு வியாபாரி கள், ஒரு ஊரில் ஒற்றைக்கடை மட்டும் வைத்திருக்கும் அந்த ஊரின் பெரிய(!) வியாபாரிகள் உள்ளிட்டவர்களின் சந்தைப் பங்கை இந்த இணையக் கடைகள் கைப்பற்றியிருக்கி றார்களே தவிர, வேறில்லை!
தனிப்பட்ட வசதிகள்
சரி, எப்படி இது சாத்தியமாயிற்று? தீபாவளியின்போது போனஸ் கிடைப்பதால், புத்தாடைகளைத் தாண்டி, சில பெரிய செலவுகளைச் செய்யும் பழக்கம் கடந்த சுமார் 2 பத்தாண்டுகளில் உருவாகி, வளர்ந்திருக்கிறது. அல்லது, கார்ப்பரேட் விளம்பரங்களால் வளர்க்கப்பட்டிருக்கிறது. போனஸ் கிடைக்காவிட்டாலும்கூட, கடன் வாங்கியாவது தீபாவளிக்குச் செலவு செய்வது என்பது காலம் காலமாகவே இருந்துவந்த பழக்கம்தான். அப்படியான பழக்கத்தை விற்பனைக்கு உதவுவதாக மாற்றுவது என்பதில் சிறிய கடைகளைவிட, இந்த நாடுதழுவிய இணையக் கடைகளுக்கு பல கூடுதல் வாய்ப்பு கள் உள்ளன. குறிப்பாக, கடன் வசதி அளிப்பது, அதனை வட்டியின்றி அளிப்பது முதலானவற்றை ஓரளவு பெரிய கடை களும்கூட செய்தாலும், அனைத்து வங்கிகளுடனும் ஒப்பந்தம் செய்து, எந்தச் சிரமமுமின்றி, சில கிளிக்குகளில் கடன் அளிப்பது என்பது இந்த இணையக் கடைகளின் தனி வசதி. அதைத்தாண்டி, பல பெரிய வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு என்று சிறப்புத் தள்ளுபடிகளைத் தர முடிவது என்பது, எந்த தனிக் கடையாலும் செய்ய முடியாதது.
இவற்றைச் செய்வதற்கு, கடன் அட்டைகள் கட்டாயமாக இருந்த நிலையையும் இந்த நிறுவனங்கள் மாற்றியமைத்து, வங்கிக் கணக்குடன் தரப்படும் பற்று அட்டைகளைக் கொண்டே தருவதற்கும் ஏற்பாடு செய்துள்ளன. இவற்றை யும் தாண்டி, இந்த 6 நாள் சிறப்பு விற்பனையின்போது, பல பொருட்களின் விலையும், இதுவரை கற்பனை செய்திருக்க முடியாத அளவுக்கு இந்நிறுவனங்களால் குறைக்கப் பட்டது. நாடு முழுவதற்கும் மொத்தமாகக் கொள்முதல்செய்வ தால், உற்பத்தியாளர்களின் விலை நிர்ணயத்திலேயே தலையிட்டு, இவர்களால் இதைச் செய்ய முடிகிறது. இவையெல்லாம்தான் இந்த விற்பனையின் பின்னணி என்பதுடன் பிரச்சனை முடியவில்லை. தீபாவளிக்கு பொருட் கள் வாங்குவதையே இரு வாரங்களுக்கு முன்னர்தான் தொடங்குவார்கள் என்ற நிலையில், ஒரு மாதம் முன்பே சிறப்பு விற்பனை நடத்தி, (கடன் அட்டைகளுக்கு) பின்னர் பணம் செலுத்திக்கொள்ளலாம் என்று ஈர்த்து, வாங்கவும் செய்துவிட்ட நிலையில், இனி உள்ளூர் கடைகளில் என்ன விற்பனை நடக்க முடியும்?
30 சதவீதம் குறைவு
மொபைல், ஆடைகள் உள்ளிட்டவற்றை விற்பவை உள்ளிட்ட சில்லறை விற்பனைக் கடைகள் வழக்கமான அளவுக்கு பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள வில்லை என்ற செய்தி அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. இந்தியா முழுவதுமுள்ள மொபைல் சில்லறை விற்பனைக் கடைகள், கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் குறைவான சரக்கு களையே இருப்பு வைத்துள்ளதாக, அகில இந்திய மொபைல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் அர்விந்தர் குரானா தெரிவித்துள்ளார். வட இந்தியாவின் பெரிய சில்லறை விற்பனையாளர்களான கிரேட் ஈஸ்டர்ன், கோஹினூர் போன்றவைகள்கூட, ஜூலை, ஆகஸ்ட் சரக்கு களே விற்பனையாகாததால், புதிதாக அதிகம் கொள்முதல் செய்யவில்லை என்று கூறியுள்ளன. ஆடைகள் முதலான வற்றைக்கூட இருப்பு வைத்துக்கொள்ள வணிகர்கள் அஞ்சும் நிலையிருப்பதாக இதழ்கள் தெரிவிப்பதை, அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பின் பொதுச்செலாளர் ப்ரவீன் கண்டேல்வால் உறுதிப்படுத்தியிருக்கிறார். இதில் கவனிக்க வேண்டிய செய்தி என்னவெனில், இன்றுவரை, ஒட்டு மொத்த இந்தியாவின் சில்லறை விற்பனையில் இணையக் கடைகளின் பங்கு 10 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. அதில் 50 சதவீத வளர்ச்சி என்பது, சில்லறைக் கடைகள் இழக்கும் 30 சதவீதத்தின் உண்மையான அளவைவிட மிகக்குறைவே. அதாவது, இணையக் கடைகளில் வாங்குவதற்கான, இணையத்தில் இயக்கும் வங்கிக்கணக்கு, கடன் அட்டை போன்ற வசதி வாய்ப்புகளைப் பெற்றிருப்பவர்கள், கடந்த ஆண்டைவிட அதிகமாக இணையக் கடைகளில் பொருட்களை வாங்கியிருக்கிறார்கள். எஞ்சியவர்கள் என்ற மிகப்பெரிய பகுதி, தீபாவளிக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறது.
இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி, ஓணம், நவராத்திரி - துர்க்கா பூசை என்று ஒவ்வொரு பகுதியிலும் தொடங்கி, தீபாவளியில் உச்சம் பெறுவது விழாக்காலமாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த விழாக் காலமே விற்பனையின் வளர்ச்சிக்கான காலம் என்று எர்னஸ்ட் அண்ட் யங் மதிப்பீட்டு நிறுவனத்தின் இந்தியப் பிரிவு குறிப்பிடுகிறது. அவ்வாறான காலம் உரிய வளர்ச்சியை அடைய முடியாததால்தான் இந்தக் காலகட்டத்தில் ஐஎம்எஃப் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் இந்தியாவின் எதிர்பார்ப்பு வளர்ச்சியைக் குறைத்துள்ளன என்பதுதான் உண்மை. வளர்ச்சி இல்லை என்பதை ஒப்புக்கொண்டால் மட்டுமே அதைச் சரிசெய்யும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த முடியும். அதைவிடுத்து, வளர்ச்சி உள்ளதாக நிரூபிக்கச் செய்யும் முயற்சிகள் இந்தியப் பொருளாதாரத்தை மேலும் சரிவடையவே செய்யும்!