tamilnadu

img

நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறைகளிலும் முறைகேடு? விசாரணை நடத்த பிற தேர்வர்கள் கோரிக்கை

விருதுநகர்:
அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த 2018- ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட உதவிப் பொறியாளர்  தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக  தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.  இதுகுறித்தும் முழு விசாரணை நடத்த பிற தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது தமிழகத்தில் கடந்த 2018ல் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வு எழுதியவர்களில் 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பலர் சிபிசிஐடி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிலர் விசாரணை வளையத்திற்குள் உள்ளனர்.இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளில் காலியாக இருந்த 324 உதவிப் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப  அரசுப் பணியாளர் தேர்வாணையம்  அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்ற பலர் தற்போது பணியில் உள்ளனர். இந்தத் தேர்வில் காரைக்குடி, சென்னை ஆகிய இடங்களில் உள்ள  இரு பயிற்சி மையங்களில் படித்தவர்களில் பெரும்பாலானோர் பணியில் சேர்ந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி யுள்ளன.குறிப்பாக நெடுஞ்சாலைத் துறையில் தற்போது பணியாற்றிவரும் பல உதவிப் பொறியாளர்கள் இவ்விரண்டு பயிற்சி மையங்களின் மூலம் தேர்வு எழுதியவர்கள் எனக் கூறப்படுகிறது.நெடுஞ்சாலைத்துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், சாலைஆய்வாளர்,  சாலைப் பணியாளர் உட்பட ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப உயரதிகாரிகள்  அக்கறை காட்டவில்லை. ஆனால், உதவிப் பொறியாளர் பணியிடங்கள் மட்டும் காலியாக இருந்தால் அதற்குஆண்டு தோறும் தேர்வுகள் நடைபெறும்.  உதவிப் பொறியாளர்கள் தான் நடைபெற்ற பணிகள் குறித்த விபரங்களை பதிவேட்டில் எழுதுபவர்கள். எனவே, இப்ப பணியிடங்களை உடனடியாக நிரப்பப்படுகின்றன. பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியத்திலும் இதே நிலை தான். சிலர் இடைத்தரகர்கள் மூலம்  கையூட்டுப் பெற்றுக் கொண்டு குறுக்குவழியில் பலருக்கு  அரசுப் பணியிடங்களை வழங்கியதாகக்  கூறப்படுகிறது.விரிவான விசாரணை தேவை: மேற்கண்ட துறையில் தேர்வாணையத்தின் மூலம் பணிக்குச் சேர்ந்தவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர்,  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகர் எம்.பி. கோரிக்கை:- இதுகுறித்து விருதுநகர் தொகுதிமக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில், “தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட இடங்கள், அதில் பணியாற்றுபவர்கள் குறித்துபணியில் இருக்கும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் முழு விசாரணை நடத்த வேண்டும். அதன் மூலம் தான்,இந்த மெகா ஊழலில் தொடர்புடையஅனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய முடியும். இதை தமிழக அரசு உடனடியாகச் செய்ய வேண்டுமென்றார்.
நமது நிருபர்