புதுதில்லி:
நாடுமுழுவதும் 72 ஆயிரம் அரசு மருத்துவமனைகளில் தற்போதும் கழிப்பறை வசதி இல்லை என்று மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி, 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் அறிவித்தவற் றில்‘தூய்மை இந்தியா’ திட்டமும் ஒன்றாகும். கழிப்பறை இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவதும், திறந்தவெளியில் மலம்கழிப்போர் இல்லாத நாடாக இந்தியாவைமாற்றுவதும்தான் தனது லட்சியம் என்றுமோடி அப்போது கூறினார்.
பின்னர், 5 ஆண்டுகள் கழிந்த நிலையில், ‘தூய்மை இந்தியா திட்ட’ லட்சியத்தை அடைந்து விட்டதாக, 2019 அக்டோபர் 2-ஆம் தேதி அறிவித்தார்.“60 மாதங்களில் 60 கோடி மக்களுக்காக 11 கோடிக்கும் மேலான கழிப்பறைகளை கட்டியுள்ளதைப் பார்த்து உலகமே ஆச்சர்யப்படுகிறது; இந்தியா இன்று திறந்தவெளி கழிப்பிடங்களே இல்லாத நாடாகத் திகழ்கிறது” என்று அவர் கூறினார்.“எனது பல்வேறு சமூக நலத் திட்டங்களில் மக்களுக்கு பெரும் உதவியாக ‘தூய்மை இந்தியா’ திட்டம் இருக்கிறது. நான் ஆட்சிக்கு வந்தசமயத்தில் கழிப்பறை உள்ள வீடுகள் வெறும் 38.7 சதவிகிதம்தான். இப்பொழுது 97.26 சதவிகிதமாக உயர்ந்துள் ளது; நான் கொண்டுவந்த ‘தூய்மை இந்தியா’ திட்டத்தாலேயே இந்த சாதனை ஏற்பட்டது” என்று தனக்குத் தானே கைதட்டினார்.இந்நிலையில்தான், ‘நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ள கழிப்பறை வசதிகள்’ தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பேசியுள்ளார்.
அதில், “நாடு முழுவதும் 72 ஆயிரம் அரசு மருத்துவமனைகள் இன்றும் கழிப்பறை வசதிகள் இல்லாமலேயே செயல்படுகின்றன; 1 லட்சத்து 15 ஆயிரம் அரசு மருத்துவமனைகளில் ஆண் - பெண் நோயாளிகளுக்கு என தனித்தனி கழிப்பறை வசதிகள் இல்லை; ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் போன்ற கிராமப்புறஅரசு மருத்துவமனைகளில் பெரும் பாலும் கழிப்பறை வசதிகள் என்பதே இல்லை” என்று புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார்.சத்தீஸ்கர், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில்தான் அரசு மருத்துவமனைகளில் கழிப்பறைவசதி மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ளதாகவும் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார்.அதாவது, திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழித்துவிட்டதாக பிரதமர் மோடி பெருமை பீற்றி வரும் நிலையில், அதில் உண்மை இல்லை என்பதைஅவரது அமைச்சரே போட்டு உடைத் துள்ளார். “கிராமப்புறங்களில் 28.7 சதவிகிதம் வீடுகளில் கழிப்பறை வசதியில்லை; அவர்கள் திறந்த வெளியில்தான் மலம்கழிக்கிறார்கள்” என்று தேசிய புள்ளியியல் துறை அலுவலகம் (NationalStatistical Office - NSO) கடந்த வாரம்ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதை வழிமொழிவதாகவே, அமைச்சர் ஹர்ஷவர்த்தனின் அறிக்கையும் அமைந்துள்ளது.