states

img

விவசாயிகள் நாடாளுமன்றம் ‘அமைச்சர்’ விலகினார்

தில்லியின் நாடாளுமன்ற வீதியில் விவசாயிகளின் நாடாளுமன்றம் இரண்டாவது நாளாக வெள்ளியன்று நடைபெற்றது.

இரண்டாவது நாள் நடைபெற்ற நாடாளுமன்ற நடவடிக்கையின்போது விவசாயிகளின் கண்களைச் சந்திக்கத் தன்னால் முடியாததால் தான் ராஜினாமா செய்வதாகக் கூறி ‘வேளாண்துறை அமைச்சர்’ பதவி விலகினார்.

பாரதிய கிசான் யூனியன்(கடியன்) சங்கத்தைச் சேர்ந்த ரண்வீர் சிங் பிரார், ‘ஒன்றிய வேளாண் அமைச்சராக’ விவசாயிகள் நாடாளுமன்றத்தில் தன்னைக் காட்டிக்கொண்டார். அவரால் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை.

பின்னர் பிரார் கூறும்போது, “நான் ஒருநாள் மட்டும் அமைச்சராக்கப்பட்டேன். விவசாயிகள் எழுப்பிய கேள்விகள் எதற்கும் என்னால் பதில் அளிக்க முடியாததால் நான் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. விவசாயிகளின் கண்களை என்னால் சந்திக்க முடியவில்லை,” என்று கூறினார்.

“விவசாயிகள் எழுப்பும் கோரிக்கைகள் நியாயமானவை. எனவேதான் அதனை எதிர்கொள்ள முடியாமல் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. உண்மையிலேயே வேளாண் அமைச்சராக இருந்திடும் தோமார் அவர்களும் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால் அதிகாரத்திற்கு வந்தபின் தாங்கள் எங்கிருந்து வந்தோம் என்பதை மறந்துவிடுகிறார்கள்,” என்றும் அவர் கூறினார்.

வெள்ளியன்று நடைபெற்ற விவசாயிகள் நாடாளுமன்றத்தில் 52 உறுப்பினர்கள் உரையாற்றினார்கள்.