புதுதில்லி:
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் போலியான நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் சுமார் 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வரையிலும் ஜிஎஸ்டி வரி மோசடி செய்திருப்பதாக மறைமுக வரிகள் வாரிய புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்புக் குழு கண்டுபிடித்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட நபர் தற்போது கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்பிருந்த வாட் வரி விதிப்பு முறையில் அதிக அளவில் முறைகேடுகள் நடப்பதாகவும், இதனால் மத்திய மாநில அரசுகளுக்கு முறையாக வரவேண்டிய வரி வருவாய் வேறு வழிகளில் சென்று கறுப்புப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறது என்றும் கூறித்தான், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலையில் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டது.ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் விதிமுறைகள் அனைத்துமே தெள்ளத் தெளிவாக உள்ளதால், இதில் போலியாக நிறுவனங்களை உருவாக்குவது, அதன் மூலம் டம்மியான இன்வாய்ஸ்களை தயாரித்து வரி மோசடி எல்லாம் செய்யமுடியாது, அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது என்று மத்திய அரசு அப்போது உத்தரவாதம் அளித்தது.
மற்ற நாடுகளைப் போல் நம் நாட்டிலும் புதிய வரிமுறை அமல்படுத்தப்பட்டால் விலைவாசிகளும் குறையும், பொருளாதாரமும் வளர்ச்சி பெறும் என்று நாட்டு மக்களை நம்பவைப்பதற்கும் முயற்சி மேற்கொண்டது.
எப்படியோ, ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு தற்போது 2 ஆண்டுகள் கடந்துவிட்டன.
இந்நிலையில், ஜிஎஸ்டி வரிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த மார்ச் வரையிலான மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்கள் மற்றும் 2017-18ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி முழு ஆண்டுக்கான ரிட்டன்களை மத்திய ஜிஎஸ்டி ஆணையத்தின் தணிக்கைக் குழு விரிவாக ஆய்வு செய்துள்ளது.இதில், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போலியான பில்களை தயாரித்து அதன் மூலம் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையொட்டித்தான், ஹரியானாவின் சிர்சா (Sirsa) மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், சுமார் 90 போலியான நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் போலி பில்களை தயாரித்து கொள்முதல் செய்ததாகவும், அதன் மூலம் சுமார் 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வரை ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு மற்றும் வரி மோசடி செய்திருப்பதாகவும் மறைமுக வரிகள் வாரியத்தின் புலனாய்வு கண்காணிப்புக் குழு (The Directorate General of GST Intelligence-DGGSTI) கண்டுபிடித்துள்ளது. உள்ளீட்டு வரிப் பயனை பெறுவதற்காகவே, அந்த நபர் போலி விற்பனை பில்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்ட நபர் சுமார் 110 கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளையும், கையொப்பமிடாத காசோலைகளையும், 173 வங்கிக் கணக்கு ஆவணங்களும் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.