திருவனந்தபுரம்:
கேரளத்தில் அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், படித்த வேலையற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் கடந்த ஐந்துஆண்டுகளில் பயனுள்ள தலையீடுகள் மற்றும் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கேரள முதல்வர் கூறினார்.கேரள முதல்வர் பினராயி விஜயன் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: அரசு நியமனங்களில் மட்டுமல்ல, பிற துறைகளிலும்கூட வேலை வழங்கி படித்தவர்களை அரவணைக்க அரசாங்கத்தால் முடிந்தது.
அதிகபட்ச எண்ணிக்கையிலான காலிப்பணியிடங்களை பிஎஸ்சிக்கு (கேரள அரசுப் பணியாளர்தேர்வாணையம்) தெரிவிக்கவும், அதன் மூலம் நியமனங்கள் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, 2020 டிசம்பர் 31 வரை, 1,51,513 நபர்களுக்கு பிஎஸ்சிமூலம் நியமனம் அல்லது பரிந்துரைகள்(அட்வைஸ் மெமோ) வழங்கப்பட்டுள்ளன. முந்தைய ஆட்சி காலத்தில்,பரிந்துரைக்கப்பட்ட 4031 கேஎஸ்ஆர்டிசிநடத்துனர்களுக்கு நியமனம் வழங்கியதும் இந்த அரசுதான். சுருக்கமாக, இந்த ஆட்சியில் பிஎஸ்சி ஆட்சேர்ப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.முந்தைய ஆட்சியின்போது, பிஎஸ்சி3113 தரவரிசைப் பட்டியல்களை வெளியிட்டது. இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், பிஎஸ்சி 4012 தரவரிசைப்பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது. கோவிட்டின் சூழலில், தற்போதுள்ள தரவரிசைப் பட்டியல்களின் செல்லுபடியை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க பிஎஸ்சிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது 493 தரவரிசை பட்டியல்களின் கால அளவை நீட்டிக்கிறது. தரவரிசை பட்டியல்களில் எல்டிசி, கடை நிலை பணியாளர், 14 மாவட்டங்களிலும் செவிலியர், எல்.டி ஓட்டுநர், பீட் வன அலுவலர், ரேசன் கடைகளில் விற்பனை உதவியாளர் ஆகிய பணியிடங்கள் தரவரிசை பட்டியல்கள் நீட்டிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய...
சமூகரீதியாக பின்தங்கிய பட்டியல் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக ஒரு சிறப்பு ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு வடிவம்கொடுக்கப்பட்டுள்ளது. பிஎஸ்சி அவர்களின் வீடுகளுக் நேரடியாகச் செல்வது, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் நேர்காணல்களை நடத்துவது போன்ற நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. காவல்துறை, கலால் ஆகியவற்றில் சிறப்பு நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.சுகாதாரம், காவல், கல்வித் துறைகளில் ஆட்சேர்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசு 27 ஆயிரம் நிரந்தர பதவிகளை உருவாக்கியுள்ளது. தற்காலிக பதவிகள் உட்பட, 44 ஆயிரம் பதவிகள் உருவாக்கப்பட்டன. இதனிடையேநிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் உட்பட 52 அமைப்புகளுக்கான நியமனங்கள் பிஎஸ்சிக்கு விடப்பட்டுள்ளன.அரசுத்துறைகளில் மட்டுமல்ல, படித்த இளைஞர்களுக்கு மாநிலத்திலேயே வேலை வாய்ப்புகளை உருவாக்கும் கொள்கையை அரசாங்கத்தால் செயல்படுத்த முடிந்தது. ஸ்டார்ட்அப் (தொடக்க நிறுவனம்) வளர்ச்சிபுள்ளிவிவரங்களின்படி தொடக்கங்களின் எண்ணிக்கை 300 லிருந்து 2900ஆக உயர்ந்துள்ளது. தொடக்கங்களுக்கான கார்பஸ் நிதி முந்தைய அரசாங்கத்தின் போது இல்லை. இந்தஅரசாங்கத்தின் காலத்தில் கார்பஸ் நிதியாக ரூ.739 கோடி வழங்கப்பட்டுவிட்டது. உட்கட்டமைப்பு 57,000 சதுர அடியிலிருந்து 4 லட்சம் சதுர அடியாகஉயர்த்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் ஸ்டார்ட்அப்கள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படித்தவர்களை நேரடியாக வேலைக்கு அமர்த்தின.
30,176 புதிய தொழில்கள்
அரசாங்கத்தின் தலையீடு மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. அரசாங்கம் ஏற்கனவே 52.44 லட்சம் சதுர அடி பணியிடங்களை உருவாக்கியுள்ளது. மேலும், 35.5 லட்சம் சதுர அடி பணியிடங்களுக்கான பணிகள்நடைபெற்று வருகின்றன. சர்வதேச நிறுவனங்களை மாநிலத்திற்கு கொண்டுவர முடிந்ததன் மூலம் நாடே பயனடைந்துள்ளது. டெக்னோசிட்டியின் முதல் கட்ட திறப்பு விழா அண்மையில் நடந்தது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் புதிய தலைமுறை முயற்சிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட சுமார் ரூ.1500 கோடிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது இந்த பகுதியிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
சிறுதொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஆட்சியின்போது 10,177 ஆக இருந்தது. இந்த ஆட்சி காலத்தில், 30,176 புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில்முந்தைய அரசாங்கத்தின் கீழ் 82ஆயிரம் வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டன, இடது ஜனநாயக முன்னணிஅரசு (எல்டிஎப்) இங்கு சுமார் 1.5 லட்சம் வேலைகளை உருவாக்கியுள்ளது.மேலும், செப்டம்பர் 1 முதல் 2020 டிசம்பர் 9 வரை அறிவிக்கப்பட்ட 100நாள் திட்டத்தின் முதல் கட்டத்தில் மாநிலத்தில் 50 ஆயிரம் வேலைகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இலக்கை அடைந்தது மட்டுமல்லாமல், 1,16,440 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட முழு வேலைவாய்ப்புகளையும் இங்கு முன்வைக்க விரும்பவில்லை.ஆனால், வேலைகளை உருவாக்குவதற்கும் வேலை பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் இந்த அரசு மேற்கொண்டபணிகள் முந்தைய அரசாங்கங்களை விட சிறந்தது என்று அனைவரும் நம்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.