புதுதில்லி:
போக்குவரத்துக் குற்றங்களுக்கு அதிகபட்சத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில், புதிய மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் 2019-ஐ, மோடி அரசு கொண்டு வந்துள்ளது.இந்த சட்டத்தின்படி, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோருக்கான அபராதம் ரூ. 500-லிருந்து ரூ. 5 ஆயிரமாகவும், அதிவேகமாக வாகனம் ஓட்டுவோருக்கு ரூ. 400-லிருந்து ரூ. ஆயிரமாகவும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ. ஆயிரத்திலிருந்து ரூ. 5 ஆயிரமாகவும், மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு ரூ. 2 ஆயிரத்திலிருந்து ரூ. 10 ஆயிரமாகவும் அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல ஹெல்மெட் அணியாதவர்களுக்கான அபராதமும் ரூ. 100-லிருந்து ரூ. ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த புதிய மோட்டார் வாகனத் திருத்த சட்டத்தின் 63 விதிகளும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதா 2019, சட்டமாக்கப்பட்டு உள்ளது. இதில், அபராதம், உரிமம், பதிவு, தேசிய போக்குவரத்து கொள்கை போன்ற 63 பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. இந்த 63 பிரிவுகளும் சட்ட அமைச்சகத்திற்கு அளிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டு உள்ளது. தற்போது சட்ட அமைச்சகம் அதை மறுஆய்வு செய்து வருகிறது. இன்னும் இரண்டு அல்லது நான்கு நாட்களுக்குள் அந்தப் பணி முடிவடைந்து விடும் என்றும் நிதின் கட்காரி குறிப்பிட்டுள்ளார்.