புதுதில்லி:
கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) நிறுவனத்தின் பதிவுப் பட்டியலிலிருந்து, 18 லட்சம் தொழிலாளர்கள் விடுபட்டு இருப்பதுவெளிச்சத்திற்கு வந்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் இபிஎப்ஓ சந்தாதாரர்களின் எண்ணிக்கை 4.768 கோடியாக இருந்தது. இது அக்டோபர் மாதத்தில் 4.582 கோடியாக குறைந்துள்ளது. ஒரே மாதத்தில் சுமார் 18 லட்சம், இபிஎப் சந்தாதாரர்கள் (தொழிலாளர்கள்) வெளியேறியுள்ளனர்.கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த மார்ச் 25 முதல் நாடுதழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட் டது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங் கள் துவங்கி சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அனைத்தும் முடங்கின.உற்பத்தி - வர்த்தகம் என எதுவும் நடைபெறாததால், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பைச் சந்தித்தனர். மே மாதத்திற்குப் பின், ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டாலும், பழைய நிலைமை முழுமையாக திரும்பவில்லை. வேலையின்மை, பணவீக்கம் முக்கியப் பிரச்சனைகளாக தொடர்ந்து கொண்டிருக் கின்றன. மோடி அரசு கூறிய வேகத்தில் பொருளாதாரம் மேம்படவில்லை. மாறாக, 2020 - 21 நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டிலும் ஜிடிபிவீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. பொருளாதார மந்த நிலை கட்டத்தில் இந் தியா நுழைந்துள்ளது.இதற்கிடையேதான், கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 18 லட்சம்தொழிலாளர்கள் இபிஎப்ஓ பதிவிலிருந்து விடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.இதே அக்டோபர் மாத காலத்தில்,தொழிலாளர்களுக்கு வேலையளிக் கும் 30 ஆயிரத்து 800 தொழில் நிறுவனங்களும் பட்டியலிலிருந்து வெளியேறியுள்ளன.கடந்த செப்டம்பர் மாதம் 5 லட்சத்து 34 ஆயிரத்து 869 தொழில் நிறுவனங்கள், இபிஎப்ஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 5 லட்சத்து 4 ஆயிரத்து 44 நிறுவனங்கள் மட்டுமே இபிஎப்ஒ நடைமுறைப் பட்டியலில் உள்ளன. 30 ஆயிரத்து 800 நிறுவனங்கள் வெளியேறி உள்ளன.
இபிஎப்ஓ சந்தாதாரர்கள் எண் ணிக்கைக் குறைவுக்கு, பணி ஓய்வுபெறுவது, தாங்களாகவே கணக்கைமுடித்துக் கொள்வது போன்ற பல் வேறு காரணங்களைக் கூற முடியும் என்றாலும், அக்டோபரில் 18 லட்சம் பேர் இபிஎப்ஓ கணக்கிலிருந்து வெளியேறியிருப்பதற்கு, வேலையின்மை முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.ஏனெனில், 30 ஆயிரத்து 800தொழில் நிறுவனங்களும் இந்த காலத்தில் இபிஎப்ஓ பட்டியலிலிருந்து வெளியேறி இருப்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.இபிஎப்ஓ பதிவுப் பட்டியலில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்திலேயே குறைந்தது. அடுத்தடுத்த மாதங்களில் சற்றுமுன்னேற்றம் காணப்பட்டது. ஆனால், செப்டம்பர் மாதம் வரைகாணப்பட்ட இந்த முன்னேற்றம், அக்டோபரில் திடீரென்று மிகப்பெரியசரிவைச் சந்தித்துள்ளது. ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பெரிதும் பாதிப்புக்கு உள் ளானது. தொழில் நடத்துவதில் நிறுவனங்கள் பெரும் சிக்கலை எதிர் கொண்டன. இதனால், பி.எப். தொகைக்கு செலவு செய்ய முடியாத நிலை காரணமாகவே நிறுவனங்கள் வெளியேறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.எந்த வகையில் பார்த்தாலும், இந்தச் சரிவு தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் சந்தையில் தேவை குறைந்துள்ளதன் காரணமாகவே ஏற்பட்டிருக்கிறது என்றும், பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில்துறை சந் திக்கும் சவால்களை இது தெளிவாக காட்டுவதாகவும் தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து நிறுவனங்கள் எதிர்பார்த்த வேகத்தில் மீண்டு வரவில்லை என்பதையும் இபிஎப்ஓ புள்ளிவிவரம் காட்டுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.