புதுதில்லி:
கொரோனா சோதனைக்காக 1717 ஆய்வுக்கூடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அரசாங்கத்தின் ஆய்வுக்கூடங்கள் 1049 என்றும் தனியார் ஆய்வுக்கூடங்கள் 668 என்றும் பி.ஆர்.நடராஜன் எம்.பி.எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.
நாட்டில் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று சம்பந்தமாக மக்கள் அனைவரையும் சோதனை செய்து பார்ப்பதற்குத் தேவையான அளவுக்கு ஆய்வுக்கூடங்கள் இருக்கிறதா என்றும் அதற்கான விவரங்கள் என்ன என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று சம்பந்தமாக மக்களை ஆய்வு செய்து பார்ப்பதற்குத் தேவையான அளவிற்கு ஆய்வுக்கூடங்கள் இருக்கிறதா என்றும்,மாநிலங்கள் வாரியாக அவற்றின் விவரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார். மேலும், நாட்டில் இதுவரை கோவிட்-19 ஆய்வு செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை எவ்வளவு, அவர்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பாசிடிவ் என அறிவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், அவர்களுக்கு சிகிச்சை அளித்திட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய சுகாதாரம்-குடும்பநல இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, எழுத்துமூலம் அளித்த பதிலில், ஐசிஎம்ஆர் எனப்படும் இந்தியன் மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் செப்டம்பர் 13 ஆம் தேதியில் நாட்டில் கோவிட்-19 சோதனைக்காக 1717 ஆய்வுக்கூடங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் அரசாங்கத்தின் ஆய்வுக்கூடங்கள் 1049 என்றும் தனியார் ஆய்வுக்கூடங்கள் 668 என்றும் கூறியிருக்கிறது. செப்டம்பர் 13 அன்று மொத்தம் 5 கோடியே 72 லட்சத்து 39 ஆயிரத்து 428 பேர் கோவிட்-19க்காக சோதனை செய்யப்பட்டார்கள் . இவர்களில் 48 லட்சத்து 46 ஆயிரத்து 427 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் 250 ஆய்வுக்கூடங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்திருக்கிறது என்று பதிலளித்துள்ளார். (ந.நி.)