tamilnadu

img

தேசிய குடிமக்கள் பதிவேடு பணியில் 1600 கோடி முறைகேடு: பாஜக அரசு மீது சிஏஜி குற்றச்சாட்டு

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு பணியில் 1600 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக மத்திய தணிக்கை வாரியமான சிஏஜி அம்மாநில பாஜக அரசு மீது குற்றச்சாட்டி உள்ளது.
அசாமில் பாஜக தலைமையிலான சர்பானந்தா சோனோவால் தலைமையில்  ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்தியஅரசு கொண்டு வந்துள்ள என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் இந்த முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்து உள்ளது. 
கடந்த 1971இல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர், வங்கதேச விடுதலை போர் ஆகியவற்றின்போது, ஒரு கோடிக்கும் அதிகமான வங்கதேச மக்கள் இந்தியாவின் அசாம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறினர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில்தான்,   1971ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ அசாமுக்கு வந்தவர்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை அளிக்க முடிவு செய்து, 1951ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது. அதன் இறுதிப்பட்டியலும் மத்திய பாஜக அரசால் வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில்  சட்டவிரோதமான முறையில் அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்கள் வெளியேறுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டமும் மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால்  மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன. 
அசாம் மட்டுமின்றி நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் மத்திய தணிக்கை கணக்கு வாரியமான சிஏஜி,  தேசிய குடிமக்கள் பதிவு தொடர்பான தகவல்களை திரட்டுவதில் கடந்த 3 ஆண்டுகளில்  1,600 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்தமுறைகேடுகள் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான தகவல்களை திரட்டுவது மற்றும்  பதிவேற்றுதல், அதற்கான செலவினங்களில் நடைபெற்று உள்ளதாக தெரிவித்து உள்ளது.