புதுதில்லி:
கடந்த 2018-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 10 ஆயிரத்து 349 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக, தேசிய குற்ற ஆவணக் கழகம் (National Crime Records Bureau -NCRB) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2018-இல் நாடு முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 516 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் மகாராஷ்டிரா (17,972) முதலிடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு (13,896), மேற்கு வங்கம் (13,255), மத்தியப் பிரதேசம் (11,775), கர்நாடகா (11,561) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. ஒட்டுமொத்தத் தற்கொலைகளில், இந்த 5 மாநிலங்களில் மட்டும் 50.9 சதவிகிதம் தற்கொலைகள் நடந்துள்ளன.
49.1 சதவிகித தற்கொலைகள் மீதமுள்ள 24 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் பதிவாகியுள்ளன.இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட 1 லட்சத்து 34 ஆயிரத்து 516 பேர்களில், விவசாயிகள் மட்டும் 10 ஆயிரத்து 349 பேர் என்று கூறப்பட்டுள்ளது. இவர்களில், 5 ஆயிரத்து 763 பேர் விவசாயிகள். 4 ஆயிரத்து 586 பேர் விவசாயத் தொழிலாளர்கள். மேலும், 306 பெண் விவசாயிகள், 515 பெண் விவசாயத் தொழிலாளர்களும் இந்த தற்கொலை எண்ணிக்கைக்குள் அடங்குவர்.
நாட்டின் ஒட்டுமொத்த தற்கொலை எண்ணிக்கையில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலை மட்டும் 7.7 சதவிகிதமாக உள்ளது.ஒட்டுமொத்த தற்கொலைகளைக் கணக்கில் கொண்டால், 2017-ஆம் ஆண்டைவிட 2018-இல் 3.6 சதவிகிதம் பேர் கூடுதலாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அதேநேரம், விவசாயிகளின் தற்கொலை 2017-ஐக் காட்டிலும் சற்று குறைந்துள்ளது. 2017-இல் 11 ஆயிரத்து 319 விவசாயிகள் தற்கொலைகள் பதிவாகி இருந்தன.கடந்த 2018-இல் மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, உத்தர்கண்ட், மேகாலயா, கோவா, சண்டிகர், டாமன் டையு, தில்லி, லட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு விவசாயிகூட தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும் என்சிஆர்பி புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.