tamilnadu

img

ஊரடங்கிலும் உதிரம் தானம்... திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு வாலிபர் சங்கம் கொடுத்த 75 யூனிட் ரத்தம்.....

 நாமக்கல்:
திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 75 யூனிட் இரத்தத்தை தானமாக வழங்கினர். 

திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு தேவையான ரத்தத்தை வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூலம் நடத்திடும் முகாம்கள் மூலமாகவும், கல்லூரி மாணவர்கள் மூலமாகவும், விழிப்புணர்வு உள்ள சில கொடையாளர்கள் நேரடியாக தன்னுடைய அல்லது தனக்கு பிரியமான தலைவர்களின் பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய தினங்களில் வழங்கும் ரத்தத்தின் மூலமும், நோயாளிகளின் உறவினரிடம் பெறும் ரத்தத்தின் மூலமும், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை தனது  தேவையை பூர்த்தி செய்து வருகிறது. ஆனால் பெருந்தொற்று காலத்தில் முகாம்கள் நடைபெறவில்லை,  கல்லூரிகள் இல்லை. இதனால் அரசு மருத்துவமனை ரத்தவங்கியில் ரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகள் பெறும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது. எனவே, மருத்துவமனை நிர்வாகம் இரத்தம் தேவை என வாலிபர் சங்கத்தினரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்செங்கோடு சூரியம்பாளையம் வாலிபர் சங்க கிளை சார்பாக  இரத்ததான முகாம் நடத்தினர். இந்த இரத்ததான முகாமில் 4 பெண்கள் உட்பட மொத்தம் 75 நபர்கள்  இரத்ததானம் அளித்தனர். பெறப்பட்ட 75 யூனிட்டுகள் இரத்தம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை ரத்த வங்கி  ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்விற்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சூரியம்பாளையம் கிளைத் தலைவர் ஏ.சங்கர் தலைமை தாங்கினார்.  வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.கண்ணன், சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் ஆதிநாராயணன், முன்னாள் நகர செயலாளர்கள்  ஸ்ரீனிவாசன், விஜயபாரதி, முன்னாள் நகர தலைவர்கள் கார்த்தி, செந்தில், மார்க்சிஸ்ட் கட்சி நகர குழு உறுப்பினர் நடேசன், கிளை செயலாளர்கள் கார்த்தி, ஈஸ்வரன், கந்தசாமி, சிங்காரம், தர்மலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும்,  பல்வேறு அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டு  இரத்ததானம் அளித்தவர்களை வாழ்த்தி பேசினர் .

இறுதியாக, வாலிபர் சங்க நாமக்கல் மாவட்ட செயலாளர் என்.கண்ணன் இரத்த தான முகாமை நிறைவு செய்து பேசினார். இதனையடுத்து, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை இரத்த வங்கியின் பொறுப்பாளர்கள் வாலிபர் சங்க நிர்வாகிகளிடம் நற்சான்றிதழ்களை   வழங்கி, ஊரடங்கு காலத்திலும் இரத்ததானம் அளித்து மனிதநேய சேவையை செய்யும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை மனதார பாராட்டுகிறோம் என தெரிவித்தனர்.