மாணவர் போராட்டங்களோடு துவங்கி, அரை நூற்றாண்டு காலம் உழைக்கும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் புரட்சிகர தன்மையோடு செயல்படும் தலைவர் எம்.ஏ.பேபி, சிபிஎம் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பரக்குலத்தை சேர்ந்த பி.எம்.அலெக்சாண்டர் மாஷ் மற்றும் லில்லி ஆகியோரின் எட்டு குழந்தைகளில் இளையவரான எம்.ஏ.பேபி 1954-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி பிறந்தார். 1972 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற 9ஆவது சிபிஎம் அகில இந்திய மாநாட்டிற்கு முந்தைய கொல்லம் மாநில மாநாட்டின் போது அவர் கட்சியில் சேர்ந்தார். மதுரையில் தொடங்கி தற்போது மதுரையில் நடைபெறும் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் அவர் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு உயர்ந்துள்ளார்.
எம்.ஏ.பேபி, 1974இல் இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய செயற்குழுவில் இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1975-இல் இந்திய மாணவர் சங்கத்தின் கேரளா மாநிலத் தலைவராகவும், 1979இல் இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவராகவும், 1987இல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவராகவும் கட்சியில் பணியாற்றினர்.
இதன் பிறகு, 1986இல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் இளம் வயது உறுப்பினர்களில் ஒருவரானார். ராஜ்யசபா தலைவர் குழுவில் இடம் பெற்றார். இவர் 1998 வரை மாநிலங்களவை உறுப்பினர். இதை தொடர்ந்து கடந்த 2006இல், கேரளத்தில் உள்ள குண்டரா சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக வெற்றி பெற்று, அம்மாநிலத்தின் கல்வி & கலாச்சாரத் துறை அமைச்சராக 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். அவர் கல்வி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது, "கலாமண்டலம்" பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டது. கலைஞர்கள் நலனுக்கான "கலைஞர் நல நிதி சட்டம்" நிறைவேற்றப்பட்டது; - கொச்சி-முஸிரிஸ் பினாலேவுக்கு அடிக்கல் நாட்டினார்; கலைஞர்கள் நலனுக்கான "கலைஞர் நல நிதி சட்டம்" நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிட்டத்தக்கது.
"எனது எஸ்எஃப்ஐ காலம்", "வாருங்கள் இந்த இரத்தத்தைப் பாருங்கள்: புஷினுக்கு எதிராக கலைஞர்கள்" (ஷிபு முகம்மடுடன் இணைந்து), "எம்.ஜி.எஸ். வெளிப்படுத்தப்படுகிறார்", "அறிவின் ஒளி, நாட்டின் வெளிச்சம்", "கிறிஸ்து, மார்க்ஸ், ஸ்ரீநாராயண குரு" (பாபு ஜோனுடன் தொகுத்தது), "நோம் சோம்ஸ்கி: நூற்றாண்டின் மனசாட்சி" (தொகுப்பு), "டாக்டர். வேலுக்குட்டி அரியன்" (தொகுப்பு), "ஒ.என்.வி-யின் காதல் எழுத்துக்களில் உப்பு", "பிலிப்போஸ் மார் கிறிஸோஸ்டம் வலிய மெதிரன்", "இளைஞர் இயக்கங்களின் வரலாறு" ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவர், அரசியல், பொருளாதாரம் மற்றும் கலை, இலக்கியம் அனைத்து துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.