tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

தமிழகத்தை  ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது!  கார்த்திகேயன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி, ஏப். 5 - தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது என்று கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம்.கார்த்திகேயன் குற்றச்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி  மக்கள் தொகையை கட்டுப்படுத்த அப்போதைய ஆட்சியாளர்கள் கொண்டு வந்த சட்டத்தை தமிழகம் 100 சதம் நிறைவேற்றியது. ஆனால், தற்போது தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது. இது நம் தலை மேல்  தொங்கும் கத்தியாகும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை வலுவாக எதிர்த்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.   ஒன்றிய அரசு தொகுதி வரையறையை தள்ளி வைக்கும் வரை தமிழகத்தில் போராட்டம் தொடரும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழக முதல்வர் எப்படி போராட்டம் நடத்த வேண்டும் என அறிவிக்கிறாரோ அதற்கு ஏற்ற வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கிருஷ்ணகிரி, ஏப். 5- கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 16ஆவது பட்டமளிப்பு விழா முதல்வர் கீதா தலைமையில் நடைபெற்றது. தர்மபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் சிந்தியா செல்வி கலந்து கொண்டு, அனைத்து துறைகளை சேர்ந்த 659 மாணவிகளுக்கு இளங்கலை பட்டமும், 116 மாணவிகளுக்கு முதுகலை பட்டம் வழங்கினார். வணிக நிர்வாக செயலாண்மை துறை மாணவி முத்துலட்சுமி, பெரியார் பல்கலைக்கழக அளவில் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 5 மாணவிகள் பெரியார் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தமிழ்த்துறையில் 4 மாணவிகள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பாலியல் சீண்டல்: வாலிபர் கைது  கடலூர், ஏப். 5 - கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள வரிஞ்சிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (32). இவர் அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியிடம்  பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சிறுமியின் பெற்றோர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து,  வாலிபர் கோபாலகிருஷ்ணனை  போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.