நாமக்கல்:
இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) நாமக்கல் மாவட்டத்தலைவர் பி.சிங்காரம் வெள்ளியன்று அகால மரணமடைந்தார்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம் அலங்காநத்தத்தை சேர்ந்த தோழர் பி.சிங்காரம், அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 1985 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அப்போது முதல் தன்னை சிஐடியு இயக்கத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து அரசு போக்கு வரத்துக் கழக சேலம் மண்டல தலைவராகவும், சிஐடியு நாமக்கல் மாவட்டத் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றி வந்தார். 2001 ஆம் ஆண்டு அதிமுக அரசின் டெஸ்மா சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தலைமையேற்று நடத்தியதற்காக சிறை சென்றார். இதேபோல், போக்குவரத்துக் கழக ஊழியர்களின் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்ததற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இவரது விவசாய தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்து வெள்ளியன்று உயிரிழந்தார். இவரின் மறைவை அறிந்து சிபிஎம், நாமக்கல் மாவட்டச் செயலாளர் எஸ். கந்தசாமி, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.தியாகராஜன், சுப்பிரமணியன், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க கோட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைவர் செம்பான், சிஐடியு நாமக்கல் மாவட்டச் செயலாளர் ந.வேலுசாமி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.அசோகன், பி.ஜெயமணி,சு.சுரேஷ்,சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் செங்கோடன், சிவராஜ், ஜெயக்கொடி, ஜெயராமன், சரவணன், சேலம் மாவட்ட சிஐடியு உதவிச் செயலாளர் கோவிந்தன், போக்குவரத்து அரங்க இடை கமிட்டி செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் தோழரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர்.