tamilnadu

img

மார்த்தாண்டம் தேனுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி

நாகர்கோவில்:
தமிழக கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் வெள்ளியன்று  மார்த்தாண்டம் அம்சி பகுதியில் உள்ள தேன் உற்பத்தி கூடத்திற்கு சென்று தேன்உற்பத்தி கூடம் மற்றும் தேன் பதப்படுத்தும் மையத்தை  ஆய்வு செய்தார். பின்னர் தேன்உற்பத்தியாளர்களுடன்  கலந்துரையாடல் மேற்கொண்டார்.  அதன்பின்பு அதிகாரிகளுடன் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில்தான் தேன் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மார்த்தாண்டம் அம்சியில் உள்ள தேன் பதப்படுத்தும் அலகில் அதிக தேன் உற்பத்தி செய்யப்படுவதுடன் விற்பனையும் செய்யப்படுகிறது. இங்குள்ள தேன் பதப்படுத்தும் மையத்தை இன்னும் விரிவுபடுத்தவும்  இங்குள்ள தேன் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வெள்ளியன்று இங்கு ஆய்வு நடத்தப்பட்டது. அம்சி தேன் பதப்படுத்தும் மையத்தில் கூடுதல் அலகுகள் அமைத்து இதனை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். இதன் மூலம் இங்குள்ள  விவசாயிகள், கிராம மக்கள் பயன் பெறுவார்கள். 

இந்த மையத்தின் மேம்பாட்டுக்காக கூடுதல் நிதி ஒதுக்க  வேண்டிய ஏற்பாடுகள்  செய்யப்படும். இதற்காக முதலமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் . தேன் உற்பத்தியாளர்கள் அளிக்கும்  தேனுக்கு கூடுதல் கொள்முதல் விலை அளிப்பது பற்றியும் முதலமைச்சரிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இங்குதான் உலகத்தரம் வாய்ந்த தேன் உற்பத்தி செய்யப்படுகிறது . இந்த தேனுக்கு புவிசார் குறியீடு பெற முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். பேட்டியின் போது பத்ம நாபபுரம் சார் ஆட்சியர் சரண்யா அறி உட்பட பலர் உடன் இருந்தனர்.