tamilnadu

img

மீன் பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்திட.... மீன் பிடி தொழிலாளர் சங்கம் மனு

நாகர்கோவில்:
கடலில் பிடித்த மீனுடன் கரை திரும்பும் குமரி மாவட்ட ஆழ்கடல் மீன் பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்திட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில்  மனு  அனுப்பபட்டுள்ளது. மாவட்ட தலைவர் கே.அலெக்ஸாண்டர், பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி, மாவட்ட பொருளாளர் டிக்கார்தூஸ் ஆகியோர் அனுப்பியுள்ள மனு விபரம் வருமாறு,

சென்ற பிப்ரவரி மாதம் விசைப்படகுகளில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்காக சென்றவர்களில் ஒரு பகுதியினர், குமரி மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளுக்கு வந்து சேர துவங்கியுள்ளனர். கொரோனா பாதிப்பு துவங்கி நீண்ட நாட்களுக்கு பின், தொழில் முடிந்து கரை திரும்புவதால் உடனுக்குடன் அவர்களுக்கு உரிய மருத்துவ சோதனை செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பிப்ரவரி மாதம் சுமார் 500 விசைபடகுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வள்ளங்களில் 6000 மீனவர்கள், ஆழ்கடல் பகுதிகளுக்கு சென்று இரண்டு மாதங்களுக்கு மேலாக தங்கி பல கோடி ரூபாய் மதிப்புள்ள மீன்களுடன், ஏப்ரல் மாதம் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பெருநாளை கணக்கிட்டு ஊர் வந்து சேர்ந்து குடும்பத்தாருடன் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

வழக்கம்போல் தொழில் முடிந்து  சுமார் ரூபாய் 12 கோடி மதிப்பிலான மீன்களுடன், 100 விசைப்படகுகளில்  மீனவர்கள் குமரி மாவட்டத்தின் மேற்கு கரையோரம் சேர்ந்துள்ளனர். எஞ்சியவர்கள் வருகின்ற பண்டிகை நாளுக்கு முன்னதாக வந்து விடுவார்கள். இந்த  விசை படகுகளிலும் வள்ளங்களிலும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மொத்தமாக சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பிலான மீன்களுடன் வந்து கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா பரவலை தடுக்க அமலில் இருக்கும் ஊரடங்கு காரணமாக மீன்பிடி துறைமுகங்களில் ஏலம் எடுக்க வியாபாரிகள் அச்சம் காரணமாக வர மாட்டார்கள். பிடித்த மீன்களை பதப்படுத்தி பாதுகாத்திட அவர்களுக்கு போதிய அளவிற்கு பனிக் கட்டி ( ஐஸ் ) தேவைப்படுவதுடன் பதப்படுத்தும் வசதிகளும் ஏற்படுத்த வேண்டும். கரையிறங்கும் மீனவர்கள் விசைப்படகுகளில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை அடுத்துள்ள அரபிகடலில் கடல் பரப்பில் பல வாரங்களாக தங்கி மீன் பிடி தொழில் செய்து வருபவர்களாவர் . பிடித்த மீனை கொண்டு வந்து தரையிறங்கி வர்த்தகம் செய்து வாழ்வாதாரங்களை தேடி கொள்பவர்கள். இம்முறை  கொடிய நோய் தொற்றுள்ள சூழ்நிலையில்அவர்கள் கரை திரும்புவதால் வந்திறங்கிய உடன் அவர்களுக்கு தொற்று சோதனை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திரைகடல் ஓடி திரவியம் தேடி குடும்பத்தாருடன் திருவிழா நாட்களை மகிழ்ச்சியுடன் களிப்பதற்காக வரும் மீனவ மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதோடு, மாவட்டத்தில் நோய் பரவுவதை முற்றிலும் தவிர்க்க போர்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆழ்கடலில் மீன்பிடிக்க  சென்று கரை வந்த மீனவர்கள்  பிடித்து வந்த மீனை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யவும், அவ்வாறு முடியாத பட்சத்தில் அவர்களது மீனை உரிய முறையில் பதப்படுத்திட தேவையான அனைத்து நடவடிக்கைளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கும்படி கேட்டுகொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.