tamilnadu

img

வன்முறையைத் தூண்டும் பேச்சுகளை நிராகரித்திடுக... அமைதியை நிலைநாட்ட சிபிஎம் வேண்டுகோள்....

நாகர்கோவில்:
வகுப்புவாத அடிப்படையில் மக்களை பிளவுடுத்தும் வகையில் வன்முறையைத் தூண்டும் பேச்சுகளை அனைத்துப்பகுதி மக்களும் நிராகரிக்குமாறும், அருமனையில் அமைதியை நிலைநாட்டுமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுகுறித்து சிபிஎம் குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் ஜனநாயககிறிஸ்தவப் பேரவையின் சார்பில் ஜுலை 18 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதாக வெளியாகியிருக்கும் கருத்துகள் கண்டனத்துக்குரியவை. மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அந்த உரை ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.18.7.2021 அன்று கிறிஸ்தவ வட்டார இயக்கம் சார்பில்அருமனையிலிருந்து ஊர்வலமாக சென்று பனங்கரையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநாளில் அருமனை அருகில் உள்ளசிதறாலில் இருந்து பனங்கரை வரை ஊர்வலம் நடத்தப்போவதாக இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு ஊர்வலங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கிறிஸ்தவ இயக்கத்தின் கூட்டம் தனிநபருக்கு சொந்தமான வளாகம் ஒன்றில் நடந்துள்ளது. அதில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதாக கூறப்படும் கருத்துகள்தான் தற்போது விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை மதுரையில் வைத்து கைது செய்துள்ளனர்.

மக்கள் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் கருத்துகள் எந்த தரப்பிலிருந்து கூறப்பட்டாலும் அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணும் வகையில் உளவுத்துறையினர் செயல்பட வேண்டும். இதுபோன்ற பிரச்சனைகளில் தமிழக அரசும்மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அமைதியையும், அன்பையும் போதிக்கும் கிறிஸ்தவ மத புரோகிதராக இருந்து கொண்டு, மத நல்லிணக்கத்தையும், மக்களின் அமைதியான வாழ்வையும் பாதிக்கும் வகையிலும், வகுப்புவாத சக்திகளுக்கு இடமளிக்கும் வகையிலும் பேசிய ஜார்ஜ் பொன்னையா அவர்களின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இத்தகைய வன்முறையைத் தூண்டும் பேச்சுக்களை அனைத்து சமூக மக்களும்நிராகரிக்க வேண்டும் என அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.