சென்னை:
தமிழகத்திற்கு தடுப்பூசி தடையின்றி வழங்க ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் கோடிக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகி மீண்டு வருகின்றனர். ஒன்றிய அரசின் தவறான கொள்கை காரணமாகவும், திட்டமிடலில் போதியஅக்கறையின்மை காரணமாகவும், நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பதின் காரணமாகவும், அதிகாரக் குவிப்பு கொள்கை மூலமாகவும் சுகாதாரம் பாதிக்கப்பட்டு மாநிலங்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. விழிப்புணர்வுமிக்க தமிழகத்தில் தினசரி 7 முதல் 8 லட்சம்மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான கட்டமைப்புகள் இருந்தபோதிலும், அதை முழுமையாக பயன்படுத்த இயலாத நிலைக்குமுடக்குவது ஒன்றிய அரசே. மாநிலத்திற்கு தேவையான தடுப்பூசிகளை முன்கூட்டியே அல்லது விரைந்து அனுப்பப்படுமானால் முறையாக தடையின்றி தடுப்பூசிகளை போட முடியும். இவை தவிரதனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவிகித தடுப்பூசி அளிக்கப் பட்டாலும், அவற்றின் பயன்பாடு சுமார் 5 சதவிகிதம் என தமிழக அரசு சுட்டிக்காட்டியிருப்பதை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தனியாருக்கு ஒதுக்கீடு செய்த அளவைகுறைத்து, தமிழக அரசு கோரிய அளவிற்கு தடுப்பூசிகளை ஒன் றிய அரசு கால தாமதமின்றி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
உலக சுகாதார நிறுவனம் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 10 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டுமெனவும், இந்தஆண்டு இறுதிக்குள் 40 சதவிகிததடுப்பூசி போட்டாக வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசியை ஒதுக்கீடு செய்வதிலும், முறையாக அனுப்பி வைப்பதிலும் பாரபட்சமின்றி ஒன்றிய அரசு செயல்பட வேண்டும்.
******************
மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை பரிசீலித்திடுக!
கடந்த இரண்டு ஆண்டு களாக கொரோனா தொற்றால் மிக நெருக்கடியை சந்தித்த சூழலில் - குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களின் தன்னலமற்ற சேவை காரணமாகமிகப் பெரிய நெருக்கடியிலிருந்து மீண்டு வருகிறோம் என்பதை யாரும் மறுக்க இயலாது.தொற்றுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததன் மூலமாக மருத்துவர்களும் தொற்றுக்கு ஆளாகி தமிழகத்தில் 72 மருத்துவர்கள் பலியானார்கள் என்பதை கனத்த இதயத்தோடு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.கடந்த ஆட்சிக்காலத்திலிருந்து மருத்துவர்கள் தங்களின் ஊதிய உயர்வுக்காக குரல்கொடுத்தும், போராடியும் அவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. நம்பிக்கையோடு, மருத்துவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்துவதோடு, உடனடியாக நிறைவேற்றப்படும் என எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள்.அவர்களின் எதிர்பார்ப்பை பொய்ப்பிக்காமல் நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் பணியாற்றிட மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை காலத்தே நிறைவேற்றிட தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
******************
அதிகரிக்கும் கொரோனா... தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டுகோள்...
தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் இரண்டாவது கட்ட கொரோனா மிகுந்த உச்சத்தை தொட்டு, மரணங்கள் கூடுதலான நேரத்தில் - கூடுதல் கவனத்தோடு மருத்துவர்கள், முன்களப்பணியாளர்கள் என அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டதன் விளைவாக இரண்டாவது அலை தொற்று பின்னுக்குத் தள்ளப்பட்டும் ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்து-இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் இச்சூழலில், குறிப்பாக தமிழகத்தின் 5 மாவட்டங்கள் முறையே தஞ்சை, திருநெல்வேலி, மதுரை, கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக ஊடகத்தின் மூலம் வரும் செய்திகள் கவலையளிக்கிறது.ஆகவே, தமிழக அரசு மேற்கூறிய மாவட்டங்களில் கூடுதலான கவனம் செலுத்தி தொற்று பரவலுக்கான மூலக்காரணத்தை கண்டறிந்து, துவக்கத்திலேயே கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் இம்மாவட்டங்களில் போதுமான மருத்துவர்கள், முன் களப்பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்து ஒருங்கிணைப்பு உருவாக்கி, தேவையான நிதி ஒதுக்கீடும் செய்து தொற்று பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.