articles

img

எங்கள் புஷ்பனை அறியாமோ? - எஸ்.ஜி.ரமேஷ்பாபு

அசைவற்ற ஒரு உடல் உங்களை உத்வேகம் கொள்ள செய்யுமா? கழுத்துக்கு கீழ் சூம்பிய ஒரு உடல் உங்களை ஆவேசம் கொள்ள செய்யுமா? தலைக்கு கீழ் இயங்காத ஒரு உயிர் நரம்புகளை புடைக்க உங்களை முழக்கமிட செய்யுமா? எனினும் அந்த அதிசயம்தான்  கடந்த 30 ஆண்டுகளாக நடந்தது. ஏனெனில்  அந்த மகத்தான, இயங்க முடியாத உடலை தாங்கிய உயிரின் பெயர் புஷ்பன். அந்த மாவீரனின்  பெயரே எங்களுக்கு போதும். போராட்ட களங்களில் அவனது அசைவற்ற உடல்  எங்களை கோபத்துடன், முஷ்டி உயர்த்தி, பீடு நடை போட்டு, அளவற்ற செறுக்கோடு    நடக்க செய்தது. நேரில் பார்க்காத லட்சக்கணக்கான இளைஞர்களை ஈர்த்த தென்துருவ காந்தமான..

இந்த புஷ்பன் யார்?

     2007 ஆம் ஆண்டு சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 8 வது அகில இந்திய மாநாடு நடைபெற இருந்த சமயம், அதற்கு முன்னதாக மாநாட்டில் ஏற்றப்படும் கொடியை கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்துபறம்பு தியாகிகள் நினைவு சின்னம் உள்ள மண்ணிலிருந்து பயணமாக கொண்டுவரும் துவக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். முன்னால் கேரள சட்டமன்ற சபாநாயகரும், அன்றைய கேரள மாநில தலைவருமான ஸ்ரீராமகிருஷ்ணன் தலைமையில் புறப்பட்ட அந்த கொடி பயண குழுவில் தமிழகம் சார்பில் நான் பங்கேற்றேன்.
    துவக்க நிகழ்வில் காலை பொழுதில் இன்றையை கேரள அமைச்சரும், அன்றைய டி.ஒய்.எப்.ஐ கேரள மாநில செயளாலருமான தோழர் எம்.பி.ராஜேஷ் என்னிடம்   “தோழர் ஒரு முக்கியமான  இடத்திற்கு போகனும் புறப்படுங்கள்” என்றார். நான் எங்கு என கேட்டேன். அவர் ”வாருங்கள் அங்குதானே போகிறோம்” என்றார், இடத்தை சொல்லாமல். எங்கள் கார் பயணம் நீண்டது. சென்னையில் நடக்க இருந்த  அகில இந்திய மாநாட்டின் ஏற்படுகள் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். எங்கே போகிறோம் என போகும் வரை அவர் எனக்கு  சொல்லவே இல்லை. மேடு பள்ளங்களை கடந்து சென்ற கார் சொக்லி பஞ்சாயத்தில் ஒரு வீட்டின் முன் நின்றது. நாங்கள் இறங்கினோம். வாருங்கள் என அங்கிருந்த கிளை தோழர்கள் எங்களை அந்த வீட்டினுள் அழைத்துச் சென்றனர். அந்த இடம் வழ்க்கையின் நான் மறக்க முடியாத நினைவுகளை என்னுள் விதைத்த இடம். ஆம் அது புஷ்பனின் வீடு!
    அங்கு உடலெல்லாம் சூம்பி தலைமட்டுமே செயல்பட்ட, 15 ஆண்டுகளாக படுக்கையிலேயே வாழும் ஒரு தோழனை எனக்கு அறிமுகம் செய்தார்கள். இவர்தான் புஷ்பன். கூத்து பெறம்பில் கல்வி வியாபரத்துக்கு எதிராக போராடியபோது காவல்துறை துபாக்கிச்சூட்டில் பலியான 5 தோழர்களுடன் குண்டடி பட்டவர். தண்டுவடத்தில் குண்டு பாய்ந்ததால் இவரால் தலையை தவிர எதையும் அசைக்க முடியாது. தோழர்கள்தான் இவரை பாதுகாத்து வருகிறோம். தியாகிகள் எங்களில் ஆதர்ஷம் என்றார்கள்.
    வார்த்தைகள் இல்லாமல் கண்ணீர் கோர்க அந்த தோழனின் கரங்களை பற்றினேன். சிரித்த முகத்துடன் புஷ்பன் கேட்டார் “எந்தா சகா தமிழக சகாக்கள் எல்லாம் சுகந்தன்னே” தலையாட்டினேன். சிறிது நேரம் பேசிவிட்டு நிகழ்வுக்கு புறப்பட்டோம். தினம் தினம் 10 க்கும் குறையாத தோழர்கள் அவருடம் நேரம் செலவழிக்கின்றனர். கட்சி கிளைகளின் கடமையாக, வாலிபர் சங்க கிளைகளின் முக்கிய பணிகளில் ஒன்றாக மாறி போனது. தியாகிகளை எப்படி கொண்டாடுகிறது செங்கொடி இயக்கம்.  

உலகமய  எதிர்ப்பின் முதல் தியாகிகளுடன் 

      1994 ஆம் ஆண்டு. உலகமய கொள்கைகள் இந்தியாவில் அமலாக துவங்கிய துவக்க காலம். நிறய ”புதிய” கொள்கைகள் அமலாயின. சோவியத் யூனியன் வீழ்ச்சியை தொடர்ந்து மக்கள் நல அரசு திட்டங்கள் உலகம் முழுவது கேள்விக்குறியாயின. உலகை ஒற்றை துருவத்தின் கீழ் கொண்டுவர அமெரிக்கா அதிவேகமாய் இயங்க துவங்கி காலம் அது. முதலாளித்துவத்திக் பொற்காலம் துவங்கியதாய் உலக முதாளிகள் உற்சாகம் அடைந்தனர். மூன்றாம் உலக நாடுகளில் மக்கள் நல திட்டங்களை வெட்டி சுருக்க டங்கல், காட், ஐ.எம்.எப் என்ற பெயரால் திட்டங்கள் தீட்டப்பட்டன.
    அதில் ஒன்றுதான் இந்தியாவில் அமலான புதிய கல்வி கொள்கை . கல்வி இனி முழுக்க முழுக்க வியாபாரம்தான் என அன்றைய காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. ஆனால் கல்வியை ஒருபோது வியாபாரமாக்க விடமாட்டோம் என  இந்தியாவில் இருந்த இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் சண்ட மாருதம் செய்தன. காஷ்மீர் துவங்கி கன்னியாகுமரிவரை கல்வி நிலைய வளாகங்களில் இந்திய மாணவர் சங்கமும், வீதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் தனியார்மய, தாளாரமய, உலகமய (LPG) எதிர்ப்பு போராட்டங்களை நடத்தின.  காவல்துறையின் அடக்கு முறைகளை கடந்து தேசம் எழுந்து நின்றது. 

அதன் உச்சம்தான் அந்த போராட்டம். 
    
    அந்த தினம்,  1994 நவம்பர் 25.  கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்துபெரம்பில் கல்வி தனியார் மயத்திற்கு எதிராக போராட ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் திரண்டனர். கல்வி எங்கள் பிறப்புரிமை. அதை வியாபராமாக அனுமதியோம் என முழக்கமிட்டனர். அன்று அங்கு நடக்க இருந்த நிகழ்வில் கலந்துக்கொள்ள இருந்த கேரள காங்கிரஸ் அமைச்சர் ராகவனை எதிர்த்து அகிம்சை முறையில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.  கருமேகம் வானில் சூழ்வதைப்போல மாணவர்களும், இளைஞர்களும் ஆயிரக்கணக்கில் திரள துவங்கினர்.  
    அமைச்சர் வரும் கார் வழியில் அமைதியாய் நின்றனர். அமைச்சர் இறங்கி தங்களுடன் பேசுவார். ”திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மாணவ செல்வங்களே, கல்வி இனி வியாபாரம் இல்லை” என சொல்லுவார் என எதிர்ப்பார்த்த அந்த கூட்ட திரள் முன்பு, அதிரடி காவல் படை இறங்கியது. எதிர்பாரா ஒரு நொடிக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. எங்கும் இருள் சூழ்ந்தது. அடுத்து துப்பாக்கி குண்டுகள் ஆட்டம் போட துவங்கியது. நிராயுதபாணியான  இந்திய நாட்டின் எதிகால தூண்கள் மீது இரக்கமற்ற தாக்குதல் நடந்தது.
    துவக்குகள் ஆட்டம் போட்டு முடித்தபோது உலகமய எதிர்ப்பு போரில் இந்தியாவின் முதல் தியாகிகளாக 5 தோழர்கள் மண்ணில் வீழ்த்தப்பட்டனர். ஆம், காவல்துறையின்  துப்பாக்கிகள் ராஜீவன், மது, ஷிபுலால், பாபு, ரோஷன் ஆகிய மகத்தான தோழர்களின்  உயிர்களை காவு  கொண்டது. இரத்த வெள்ளத்தில் அவர்கள் பிணங்களாக கிடந்தனர். ஆனாலும் இன்னுமொரு ஜீவன் தலையின் பின்புறம் குண்டடிபட்டு உயிர் தவித்து நின்றது. அந்த மகத்தான உயிர்தான் புஷ்பன். அவனே இத்துனை ஆண்டுகள் உயிர் வாழ்ந்த உடல். தனது 24 வயதில் குண்டடிபட்டு, 54 வயதில் மரணமடைந்தான். போராட்ட களத்தில் உயிர் பிழைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் ஆதர்ஷமான  அவன் ஆயிரக்கணக்கான தோழர்கள் முழக்கத்துடன் விடைபெற்றான்.   

இரத்த சாட்சி
    14 ஆண்டுகளுக்கு முன்  நினைவுகள் சுழல்கின்றன. 2010 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கேரள மாநில மாநாட்டை தமிழக வாலிபர் அமைப்பின் சார்பில் வாழ்த்தி பேசுவதற்காக சென்றிருந்தேன். முருகன் கட்டகட் என்கிற மகத்தான கவிஞர் பொது மாநாட்டு அரங்கிற்கு வந்திருந்தார். ஒட்டுமொத்த மாநாட்டு அரங்கமும் அவரிடம் இரத்த சாட்சி கவிதையை வாசிக்க அழைத்தது. 
    அவர் இசை கருவிகள் இல்லாத அந்த அரங்கில் ஒலிவாங்கியை கையில் பிடித்தார்.  மொத்த அரங்கமும் நிசப்தம் காத்தது. இரத்த சாட்சி கவிதை பாடலை பாட துவங்கினார். 
    ”அவரவருவ வேண்டீ அல்லாது, புலம் விட்டு போனவன் ரத்த சாட்சி.. என கவிதை பாடல் தொடர்ந்தது. தனக்காக அல்லாமல் பிறருக்காக வாழ்ந்து மறைபவன் இரத்த சட்சி என்ற அர்த்தத்தில் அப்பாடல் துவங்கியது... 
    ஓரிடத்தில் அவன் பெயர் சே குவேரா எனில் வேறிடத்தில் அவன் பெயர் ஏசு தேவன் மற்றோர் இடத்தில் அவன் பெயர் மகாத்மா காந்தி... பெயர்கள் மாறு ஆனால் தியாகம் எப்போதும் மக்களுக்காக செய்வதனால் அவர்கள் இரத்த சாட்சிகள் என்ற பொது பெயரால் அறியப்படுவார்கள் என அக் கவிதை  தொடர்ந்தது...
       இறுதியில் உச்ச ஸ்தாயில் ஊன் உருக அவர் குரல் எழுந்தது..
”இரத்த சாட்சிஈஈஈஈஈஈஈ
 நீ மாக பர்வதம், 
இரத்த சாட்சிஈஈஈஈஈஈஈ
 நீ மாக சாகரம்..”
    தியாகிகளே நீங்கள் உயர்ந்த மலையாக நின்று, விரிந்த கடலாக அலையாடி  ஆதர்ஷம் கொள்கின்றீர். 
    ஆம் புஷ்பன் இறந்தும் உயர்ந்து நிற்கிறான். அவனது மரணத்தை ஒரு மாநிலமே எழுந்து நின்று கண்ணிருடன் மரியாதை செய்ய காரணம், அவன் வாழும் செயல்படும்  தாரகையாய் ஜொலித்தான் என்பதே சாட்சி. இனி உயர்ந்த            வானின் துருவ நட்சத்திரமாய் அவர் வழிகாட்டுவான். லால் சாலாம் புஷபன் சகாவு.