tamilnadu

img

வி.தொ.ச. மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின் நள்ளிரவில் கைது

நாகப்பட்டினம்:
விவசாயத் தொழிலாளர் சங்கமாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலினைமயிலாடுதுறை காவல்துறை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.திங்கட்கிழமை நள்ளிரவு 3 மணிக்கு மயிலாடுதுறையில் அவரது இல்லத்தில் உறங்கிக் கொண்டிருந்த போது, ஜி.ஸ்டாலினை தீவிரவாதிகளைப் பிடிப்பது போல், வீட்டைச் சுற்றிலும் காவல் துறையினர் சுற்றி வளைத்து, கதவைத் தட்டி வீட்டினுள் புகுந்து, எந்தக் காரணமும் சொல்லாமல், அவரது துணைவியாரிடமும் ஏதும் தெரிவிக்காமல் கைது செய்து, இரவு முழுவதும் அலைக்கழித்துக் காலையில் பிணையில் வெளிவராதவாறு  வழக்குகள் போட்டு, நாகப்பட்டினம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.

மாணவர் சங்கத்திலிருந்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்திலும், தற்போது சி.பி.எம். மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும், அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பேற்றுப் பல போராட்டக் களங்களில் முன்னணி வீரராக நின்று  களப் பணியாற்றுபவர் தோழர் ஜி.ஸ்டாலின்.மயிலாடுதுறையில் சாலை ஓரங்களிலும் பிளாட்பாரங்களிலும், பேருந்துநிலையங்களி லும் தரைக் கடைகள் வைத்துப் பிழைப்பு நடத்தும் சின்னஞ்சிறிய, ஏழை எளிய வியாபாரிகள் 1000-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்கள் வாழ்வாதாரத்தைப் பாழாக்குவது போல், அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர், தரைக் கடைகளை அப்புறப்படுத்தும் செயல்களில் இறங்கினர். அந்தஎளிய வியாபாரிகள், தொழிலாளர்களைக் காப்பாற்றிட,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தரைக்கடை வியாபாரிகள் சங்கம் எனும் ஓர் அமைப்பைத் தொடங்கி, அவர்களுக்காகக் கட்சி பல போராட்டங்களை நடத்தியுள்ளது.

இப்படிப்பட்ட போராட்டங்களுக்காக 2 மாதங்களுக்கு முன்பு காவல் துறையினர், ஜி.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கணேசன், சி.பி.எம். மயிலாடுதுறை வட்டச் செயலாளர் சி.மேகநாதன், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் துரைக்கண்ணு, பழக்கடை சிவராமன், ஆர்.ரவீந்திரன் உட்பட 6 பேரைக் கைது செய்து திருச்சி மத்தியச் சிறையில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்கள் பிணையில் வெளியே வந்தனர்.இந்நிலையில், தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் துரைக்கண்ணு பெயரை ‘ரெளடிகள்’ பட்டியலில் சேர்த்து, காவல் நிலையத்தில் கேவலமாக விளம்பரப்படுத்தியுள்ளனர். இதனை எதிர்த்துத் தரைக்கடை வியாபாரிகள் சங்கமும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து 27.09.2019 அன்று மயிலாடுதுறையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான பெ.சண்முகம் தலைமையில் மயிலாடுதுறை டி.எஸ்.பி.அலுவலகத்தின் எதிரே முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திங்கட்கிழமை அன்று, குத்தாலம் ஒன்றியம், பாலையூரில் தியாகிகள் சம்பாராமசாமி, நல்லக்கண்ணு ஆகியோரின் நினைவு தின நிகழ்வில் ஜி.ஸ்டாலினும், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜும் பங்கேற்றுப் பேசினர்.ஜி.ஸ்டாலின் பேசும்போது, 27.09.19 அன்று,காவல் துறைக்கு எதிராக மயிலாடுதுறையில் முற்றுகைப் போராட்டம் நடக்கவிருப்பதால் அதில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுப் பேசினார். இதனைப் பதிவு செய்த காவல் துறையினர், திங்கட்கிழமை நள்ளிரவில், உச்சக்கட்ட அராஜக முறையில் ஸ்டாலினைக் கைது செய்து, நாகப்பட்டினம் சிறையில் அடைத்துள்ளனர்.காவல்துறையின் இந்தக் கொடுஞ்செயலை சி.பி.எம். மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி வன்மையாகக் கண்டித்துள்ளார். ஜி.ஸ்டாலினை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையேல், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நாகை மாவட்டம் முழுவதும் மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெறும் என்று கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து, நாகை மாவட்டம் முழுவதும், செவ்வாய்க்கிழமை மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.