நாகப்பட்டினம், ஏப்.23-இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாள் அன்று தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் தற்கொலைப் படையினர் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 310-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 600-க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், நாகப்பட்டினம் ஊசிமாதாகோயில், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மற்றும் முக்கியமான தேவாலயங்கள் ஆகியவற்றில் பலத்தப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி கோயிலில் மூன்றடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. கோயிலுக்குள் வரும் பக்தர்கள் சோதனை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.நாகை மாவட்டம் 180 கிலோ மீட்டர் தூரமுள்ள நீண்ட கடற்கரையை உடையது. கடற்கரைகளில் 54 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. கடற்கரை முழுவதும் 24 மணி நேரமும், கடலோரக் காவல் படையினர் மற்றும் காவல் துறையினர் மிகுந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோடியக்கரை, கோடியக்காடு, மணியன் தீவு, வேதாரணியம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட கடலோரக் கிராமங்கள் வழியாக யாரும் ஊடுருவல் நிகழ்ந்திடவோ கூடாது என்பதற்காக இப்பகுதிகளில் மிகுந்த கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடலோரங்கள் அல்லது கடற்பகுதிகளில் சந்தேகத்திற்குரிய படகுகள் ஏதேனும் காணப்பட்டால் உடனடியாக மாவட்டக் காவல் துறைக்கோ, அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ தகவல் அளிக்குமாறு மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவிப்புச் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், புகழ்பெற்ற கோயில்கள், சுற்றுலாத் தலங்கள், விமான நிலையங்கள் ஆகியவ ற்றையும் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.