மயிலாடுதுறை:
தமிழகத்தின் 38-வது மாவட்ட மாக மயிலாடுதுறை உதயமானது. காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் ஆட்சியராக லலிதா ஐஏஎஸ் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் 37 மாவட்டங்கள் உள்ளன. இதில் நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறையை தலைமையிட மாகக் கொண்டு புதிய மாவட்டஅறிவிப்பை கடந்த மார்ச் மாதம்நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து ஏப்ரல் 7 ஆம் தேதி இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, ஜூலை 15 ஆம் தேதி மாவட்ட சிறப்பு அதிகாரியாக லலிதாவும், எஸ்பியாக ஸ்ரீநாதாவும் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து சிறப்பு அதிகாரி லலிதா மாவட்ட எல்லைகளை வரையறுக்கும் பணியில் ஈடுபட்டார்.பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழகத்தின் 38-வது புதிய மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முறைப்படி தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திங்கட்கிழமை தொடங்கி வைத்தார். இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், மாவட்ட உருவாக்க அலுவலர் லலிதா, ஸ்ரீநாதா எஸ்.பி., அதிமுக மயிலாடுதுறை மாவட்டசெயலாளர் வீ.ஜி.கே செந்தில்நாதன், எம்எல்ஏக்கள் மயிலாடு துறை ராதாகிருஷ்ணன், பூம்புகார் பவுன்ராஜ், சீர்காழி பாரதி மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், வர்த்தகர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முன்னிலையில், மயிலாடுதுறை மாவட்ட முதல் ஆட்சியராக லலிதா கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து வட்டாட்சியர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை மாவட்டம் உருவானதால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய வசதிஏற்பட்டுள்ளது. நிர்வாக நலனுக்கு உகந்ததாக உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, நாகை மாவட்டம் வேதாரணியம் ஆகிய இரண்டு தாலுகாவை வருவாய் கோட்டமாக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். திங்களன்று முதல் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வணிகவரி அலுவலக கட்டிடத்தில் முதல் செயல்பட தொடங்கும். மிக விரைவில் நிதி ஒதுக்கீட்டின் மூலம்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டிமுடிக்கப்படும் என்றார்.