tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட்ட துணைத் தலைவர் வைரமுத்து சாதி ஆணவப்படுகொலை

மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) மாயிலாடுதுறை ஒன்றிய துணைத் தலைவர் வைரமுத்து (28) சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், அடியமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார், ராஜலட்சுமி ஆகியோரின் மகன் வைரமுத்து, இருசக்கர வாகன மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்து வந்துள்ளார்.  அதே பகுதியில் வசித்து வரும் குமார், விஜயா ஆகியோரின் மகள் மாலினி சென்னை தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். வைரமுத்துவும், மாலினியும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிகிறது. இதற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
கடந்த 5 ஆம் தேதி மாலினியின் உறவினர் இல்ல விழாவிற்கு வந்துள்ளார். அப்போது, மாலினியின் பெற்றோர்கள் உடனடியாக திருமண ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த அப்பெண், வைரமுத்துவை தான், திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். இதனால் மாலினிக்கும், அவரது அம்மா மற்றும் சகோதரர்கள் குகன், குணால் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இங்கு இருந்தால் வேறு யாரையாவது திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்று அச்சமடைந்த மாலினி,
சென்னைக்கு புறப்படுவதற்கு ரயில் நிலையம் சென்றுள்ளார்.  வைரமுத்துவை ரயில் நிலையத்திற்கு வரவைத்து, நடந்ததை அவரிடம் தெரிவித்து விட்டு  செல்லலாம்  என்று எண்ணி  வைரமுத்துவிற்கு போன் செய்து ரயில் நிலையம் வர சொல்லியிருக்கிறார்.

இதை அறிந்த  அவரது சகோதரர் குணால், மாலினியை  கடுமையாக தாக்கியுள்ளார்.  தாக்குவதை கண்டு வைரமுத்து மாலினிக்கு போன் செய்துள்ளார். போனை எடுத்த குணால் வைரமுத்துவையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதை தொடர்ந்து,  மாலினியின் தாய் விஜயா, வைரமுத்து வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று கடுமையாக திட்டியதோடு வைரமுத்துவை தாக்கியுள்ளார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி, போலீசார்  மாலினியை அழைத்து விசாரித்ததுள்ளனர். அப்போது தான் கடந்த 10 ஆண்டுகளாக வைரமுத்துவை காதலித்து வருகிறதாகவும், அவரையே திருமணம் செய்ய விரும்புவதாகவும்  தெரிவித்துள்ளார். மேலும் என் தாய் தந்தை மற்றும் சகோதரர்கள் குணால் குகன் இவர்களுடன் அனுப்பி வைத்தால் என்னை கொன்று விடுவார்கள் என்று காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், வைரமுத்து மற்றும் அவரது பெற்றோருடன் மாலினியை அனுப்பி வைத்துள்ளனர். 

இந்நிலையில்  சென்னையில் தான் வேலை செய்த இடத்தில் இருந்த சான்றிதழ்களை எடுத்து வருவதற்காக  செப்டம்பர் 15 அன்று காலை மாலினி சென்னை சென்ற நிலையில் அன்று இரவு சுமார் 10:30 மணி அளவில் வைரமுத்து பணிகளை முடித்துவிட்டு தனது வீட்டிக்கு  சென்ற போது வழிமறித்த மாலினியின் சகோதரர்கள் குகன் , குணால் உள்ளிட்ட நபர்கள் ஓட ஓட விரட்டி சென்று, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கழுத்து, கைகளில் சரமாரியாக வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வைரமுத்துவை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், வைரமுத்து அதற்குள் உயிரிழந்தவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.