உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணியை வீசி தாக்க முயன்ற ராகேஷ் கிஷோர் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் காலணி வீசி தாக்க முயன்றார். அப்போது, நீதிமன்ற பாதுகாவலர்கள் துரிதமாக செயல்பட்டு அவரை தடுத்து நிறுத்தி வெளியேற்றினர். வெளியே சென்றபோது, ‘சனாதன தர்மத்தை அவமதித்தால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்' என அவர் கூச்சலிட்டபடி சென்றார். மேலும், தலைமை நீதிபதி மீது காலணியை வீசியதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை, இதையெல்லாம் செய்ய கடவுள்தான் தன்னை தூண்டினார் என ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, இந்திய பார் கவுன்சில் ராகேஷ் கிஷோரின் வழக்கறிஞர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்தது. நாடு முழுவதும் ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (AIAA) அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பி.என்.எஸ் 132 மற்றும் பி.என்.எஸ் 133 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
"Zero FIR" பதிவு செய்யப்பட்ட நிலையில் இவ்வழக்கு புதுதில்லியில் இருக்கும் அதிகார வரம்பிற்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு மாற்றப்படும்.