india

img

ராகேஷ் கிஷோர் மீது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் நடவடிக்கை!

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் நீக்கி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCBA) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் காலணி வீசி தாக்க முயன்றார். அப்போது, நீதிமன்ற பாதுகாவலர்கள் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை தடுத்து அவரை வெளியேற்றினர். வெளியே சென்றபோது, ‘சனாதன தர்மத்தை அவமதித்தால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்' என அந்த நபர் கூச்சலிட்டபடி சென்றார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோவில் 7 அடி உயரமுள்ள விஷ்ணு சிலையை மீட்டெடுப்பது தொடர்பான வழக்கின் விசாரணையில், ​​தலைமை நீதிபதியின் கருத்துக்களால் வழக்கறிஞர் அதிருப்தி அடைந்ததாக தெரியவந்தது. மேலும், "தலைமை நீதிபதி மீது காலணியை வீசியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இதை செய்தால் நான் சிறைக்குச் செல்வேன், அங்கே துன்பப்பட வேண்டியிருக்கும் என்று எல்லா விளைவுகளையும் யோசித்தேன். ஆனால் கடவுளின் பெயரில் இதை செய்தேன். ஏனென்றால் கடவுள் என்னை இதையெல்லாம் செய்யத் தூண்டினார்" என ராகேஷ் கிஷோர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். 
தலைமை நீதிபதி மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, இந்திய பார் கவுன்சில் ராகேஷ் கிசோரின் வழக்கறிஞர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்தது. இதை தொடர்ந்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் நீக்கி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCBA) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் உறுப்பினர் பதவியை, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் நீக்கியுள்ளது.