பர்வானி, மே 10- மஹாராஷ்டிராவில் இருந்து சொந்த ஊருக்குப் புறப்பட்ட கர்ப்பிணி ஒருவர் 70 கி.மீ., தூரம் நடந்து சென்ற நிலையில் சாலையிலேயே அவருக்கு குழந்தை பிறந்தது. பின்னர் 164 கி.மீ. தூரம் நடந்தே சென்றார். அவரை மீட்ட காவல்துறையினர் கார் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டம் உச்சாரா கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் கவுல். மனைவி சகுந்தலா. ஒன்பது மாத கர்ப்பிணி. இவர்கள் மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்தனர். கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால், வேலையிழந்த அவர்கள் சாப்பிட பணம் இல்லாமல் தவித்தனர். இதனால், அங்கிருந்த 16 பேருடன் சேர்ந்து சொந்த ஊருக்குக் கிளம்பினர். நாசிக்கில் இருந்து அவர்களது ஊர் 1,000 கி.மீ., தூரத்தில் இருந்தது. நாசிக்கில் இருந்து கிளம்பி 70 கி.மீ., தூரம் நடந்து சென்ற நிலையில், ஆக்ரா மும்பை தேசிய நெடுஞ்சாலையில் பிம்பால்கோவான் என்ற இடத்தில் சகுந்தலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடன் வந்த பெண்கள் இணைந்து, அவருக்கு சாலையிலேயே பிரசவம் பார்த்தனர். பிறந்த குழந்தைக்கு சீக்கிய குடும்பத்தினர் உடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர், குழந்தையுடன், சகுந்தலாவும் சொந்த ஊருக்கு நடக்க தொடங்கினார். 164 கி.மீ., நடந்து சென்று, மஹாராஷ்டிரா - மத்தியப்பிரதேச மாநில எல்லையில் உள்ள பிஜாசன் நகரை அடைந்தனர். கைக்குழந்தையுடன் சகுந்தலா நடந்து வந்ததைப் பார்த்த காவல்துறையினர் நடந்ததை கேட்டறிந்து உணவு, தண்ணீர் வழங்கினர். பின்னர் பேருந்து ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.