மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவர், அங்குள்ள சிறுமியை கடந்த 4 ஆண்டுகளாக மிரட்டி வல்லுறவுக்கு உள்ளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் வசித்து வருபவர் சந்தீப் கோபிநாத் மாலி (41). பாஜக-வின் கல்யாண் நகர துணைத்தலைவராக இருந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி குழந்தைகளும் இருக்கின்றன. இந்நிலையில், சந்தீப் மாலி கடந்த 2015-ஆம் ஆண்டு முதல், மும்பையைச் சேர்ந்த ஒரு சிறுமியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி வந்துள்ளார். சிறுமிக்கு 13 வயதாக இருந்த போது தொடங்கி, கடந்த 4 ஆண்டுகளாக இந்தக்கொடுமையை இழைத்து வந்துள்ளார்.தற்போது சிறுமிக்கு 17 வயதாகும் நிலையில், அவர், பாஜக தலைவரால் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி, தனது பெற்றோருடன் மண்படா காவல்நிலையத்தில் துணிந்து புகார் அளித்துள்ளார். போலீசாரும், சிறுமி அளித்த புகாரின் பேரில் பாஜக தலைவர் சந்தீப் மாலி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து, அவரைக்கைது செய்துள்ளனர். அண்மையில் உன்னாவ் நகரத்திலும், இதேபோல சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக அந்த பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் என்பவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.