tamilnadu

img

“கல்கிக்குப் பிறகு அற்புதமான எழுத்தாளர் சு.வெ.!” வேள்பாரி விழாவில் திரைக்கலைஞர் ரஜினிகாந்த் புகழாரம்

“கல்கிக்குப் பிறகு அற்புதமான எழுத்தாளர் சு.வெ.!”  வேள்பாரி விழாவில் திரைக்கலைஞர் ரஜினிகாந்த் புகழாரம்

சென்னை, ஜூலை 12 - எழுத்தாளர் சு.வெங்கடேசனின் “வீரயுக நாயகன் வேள்பாரி” நாவல் விற்பனையில் ஒரு லட்சம் பிரதிகளைக் கடந்துள்ளது. இதனை யொட்டி “வீரயுக நாயகன் வேள்பாரி” நாவல் வெற்றி விழாவை வெள்ளியன்று மாலை (ஜூலை 11) சென்னையில் விகடன் குழுமம் நடத்தியது. இந்நிகழ்வில் “வேள்பாரி 1,00,000” வெற்றிச் சின்னத்தைத் திறந்து வைத்து திரைக் கலைஞர் ரஜினிகாந்த் பேசியதாவது: இந்த உலகமே புத்தகங்களால் இயங்கு கிறது. ‘பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு அடுத்து ‘வேள்பாரி’ புத்தகம் உள்ளது. அதில் உள்ள மணியம் செல்வத்தின் அற்புதமான ஓவியங்கள் கண்ணைக் கவர்ந்தன. சு.வெங்கடேசனின் பெரும் கற்பனை மிகவும் பிரமிப்பாக இருந்தது. வேள்பாரி நாவலை படிக்கப் படிக்க மனம் லயித்துப் போகிறது. நீலன் உட்பட ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மோடு உரையாடுவதும், நம்மை உடன் அழைத்துச் செல்வதும் - நம்மை இயற்கையோடு இயையச் செய்து விடும் காட்சிகள். மாபெரும் கவிஞர் கபிலரை, பாரி தன் தோளில் சுமந்து செல்லும் காட்சி, முருகன் - வள்ளி காதல் காட்சிகள் - என ஒவ்வொன்றும் மனதை விட்டு அகலாத - ரசித்துக் கொண்டே இருக்கச் செய்யும் காட்சிகள். இப்படி வேள் பாரியை புகழ்ந்து கொண்டே இருக்கலாம். கல்கிக்குப் பிறகு அவரைப்போல அற்புதமான எழுத்தாளர் சு.வெ.  ஓய்வுக்குப் பிறகு மீண்டும் படிக்க நல்ல புத்த கங்களை எடுத்து வைத்திருக்கிறேன், அதில் ‘வேள்பாரி’யும் ஒன்று.  கல்கியைப் பார்க்க முடியவில்லை. இப்போது இருக்கும் நம் காலத்துக் கல்கியை (சு. வெ) சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. சு.வெ.வின் அடுத்த படைப்பு ‘ஊமைத் தேவனின் வரலாறு’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் புத்தகத்துக்காகக் காத்திருக்கிறோம். அவர் இலக்கியவாதி மட்டுமல்ல, நல்ல அரசி யல்வாதியும்கூட. அவர் கம்யூனிஸ்ட் கட்சியைச்  சேர்ந்தவர். கம்யூனிஸ்ட் கட்சி கட்டுக் கோப்பா னது. டி.கே.ரங்கராஜன் போன்ற மகத்தான தலைவர்கள், சிறந்த நாடாளுமன்றவாதிகள் உள்ள கட்சி. வேள்பாரி தந்த சிறந்த எழுத்தாள ரான சு.வெங்கடேசனை கம்யூனிஸ்ட் கட்சி  கொண்டாடியது. அவரை மதுரையில் நிற்க வைத்து, நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. உண்மையிலேயே போற்றுதலுக்குரி யது அது. நான் பாராட்டுகிறேன். ‘வேள்பாரி’ படமாகப் போகிறது என்பதை அறிந்து எல்லோரைப் போல நானும் காத்தி ருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்ச் சமூகத்தின்  மீட்சிக்கு உறுதுணை மாநில நிதித்துறைச் செயலாளர் உதயச் சந்திரன் பேசுகையில், “ஒரு படைப்பு, அந்தப் படைப்பின் தேவை நிறைவேறும்போது அது வெற்றிபெறுகிறது. தமிழ்ச் சமூகம் தன் மொழி யையும் பண்பாட்டையும் மீட்கத் துடிக்கும். அதற்கு உறுதுணையாக ‘வேள்பாரி’ இருந்த தால், நாவல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆசி ரியரின் குறுஞ்செய்தியைத் தொடர்ந்து செய்த அகழாய்வில் கிடைத்த கனிமம் (இரும்பு) 5200 ஆண்டு பழமையானது என நிரூபிக்கப் பட்டுள்ளது. தமிழர்களின் மெய்யியல் குறித்து விவா தங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழர்க ளின் அறத்தைக் கட்டமைக்கும் வாய்ப்பு இந்தப் புதினத்துக்கு உண்டு. வரலாறு என்றால் வெற்றி பெற்றவர்கள் குறித்து மட்டும்தான் இருக்கும். ஆனால், வீழ்த்தப்பட்டவர்களின் வரலாற்றை, வலியை எளிய மக்கள் தாங்கிப் பிடிக்கிறார்கள். அது போன்றதோர் அழகிய புதினம்தான் ‘வேள்பாரி’. தமிழ்நாட்டில் சிறந்த படைப்பு வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று, காலத்தைக் கடந்து வென்றிருக்கிறது. தமிழர்கள் பெருமிதத்தோடு, தமிழில் வெளிவந்த நவீன பெருமிதம் மிக்க படைப்பு என்று சொல்லக்கூடிய படைப்பாக வேள்பாரி உள்ளது” என்றார். “என்னுடைய கனவுப் படம் வேள்பாரி” - இயக்குநர் ஷங்கர் இயக்குநர் ஷங்கர் பேசியதாவது: “நாவல்கள் பெரும்பாலும் உணர்வுகளாகத்தான் விரியும். ஆனால், வேள்பாரி விஷூவல்களுடன் விரிகிறது. சில்அவுட்டில் அறிமுகமாகும் பாரியில் ஆரம்பித்து, நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தோன்றுகின்ற ஒளிவாள், வட்டாற்று மணல்க ளில் வருகின்ற ஆயிரம் யானைப் படைகள் எனக் காட்சிகள் விரிந்து கொண்டே இருக்கின்றன. கபிலரின் விருந்துக் காட்சி, மதம்கொண்ட யானையை ஒரு மூலிகைச் செடியைக் காட்டி மண்டியிட வைத்த பெண், பறம்பு ஆசான் தேக்க னின் உடலைத் தூக்கிக்கொண்டு ஓடுகின்ற கூவல்குடி வீரன், விதவிதமான ஒலிகளை எழுப்பி, அந்தக் காட்டில் இருக்கும் பூச்சி, பறவை, நாய், தவளை எல்லாவற்றுக்கும் தெரி வித்து, அவை அத்தனையும் சோகத்தோடு ஒரே நேரத்தில் குரல் எழுப்புவது அற்புதமான இடம். ஒரு சோகப்பாடல் சிச்சுவேஷன் அது. பூமிக்கு அடியில் விலையுயர்ந்த மணி,  கற்களைச் சேமித்துவைக்கின்ற இடத்தை ‘பாழி நகர்’ என்று சொல்வது மாதிரி, தனக்குள் விலை  மதிப்பில்லாத அறிவையும் படைப்புத்திறனையும் சேமித்து வைத்திருக்கின்ற சு.வெங்கடேசனை ‘பாழி நகர்’ என்று சொல்லலாம். கல்கிக்கு ‘பொன்னியின் செல்வன்’ மாதிரி ஆனந்த விக டனுக்கு ‘வேள்பாரி.’ இதைப் பாடப்புத்தகமாகப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வைக்க வேண்டும். முதலில் என்னுடைய கனவுப் படமாக இருந்தது ‘எந்திரன்.’ இப்போது என்னுடைய கனவுப் படம் ‘வேள்பாரி.’ ‘சந்திரலேகா’வுக்கு மேலேயும் ஒரு படமாக ‘வேள்பாரி’ வரும். புதுப் புது டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்தக்கூடிய கதையாக இருக்கிறது ‘வேள்பாரி.’ ‘அவதார்’ மாதிரி உலகம் போற்றக்கூடிய அறிவுப்பூர்வ மான, ஜனரஞ்சகமான காவியமாக, ஒரு பெரு மைமிக்க இந்திய படைப்பாக, தமிழ்ப் படைப்பாக வரக்கூடிய சாத்தியம் இதில் இருக்கிறது. நம்பிக்கை, கனவு நனவாகும்” என்றார். கீழடி அகழ்வாய்வின் தொடர்பு திரைக்கலைஞர் ரோகிணி பேசுகையில், “நீலன் கபிலருக்குத் தந்ததுபோல, நாவலா சிரியர் நூல் முழுவதும் நமக்கும் தனைமயக்கி மூலிகையையும் நிரப்பித் தந்திருக்கிறார். அந்த மயக்கத்திலிருந்து நாம் இன்னும் தெளி யவே இல்லை. ‘முதல்வன்’ திரைப்படத்தில் ஒரு நாள் முதல்வராவதுபோல், ‘பறம்பு மலைக் காட்டுக்குள் சென்று, ஒரு நாளாவது இருப் போமா...’ என்று எல்லோரையும் ஏங்க வைத்தி ருக்கிறது சு.வெங்கடேசனின் எழுத்து. நாவலில் வரும் உதிரன், இரவாதன் என இரண்டு பெயர்களும் கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பெயர்கள். சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்னால் மண்ணால் செய்யப்பட்ட பொருளில் எழுதப்பட்ட பெயர்கள். இந்தப் பெயர்கள் இலக்கியத்தில் வேறு எங்கேயும் இல்லை. இந்தக் காலகட்டத்தில் எங்கள் தோழர் செய்த மிக முக்கியமான பணி இது. ‘தேவாங்கு (தேவ வாக்கு விலங்கு) மட்டு மல்ல, பாரியும் அப்படித்தான். என்ன விலை கொடுத்தாலும், சினம்கொண்டாலும், வீழ்ந்து பணிந்தாலும், திசை மாற மாட்டான்’ என்று பாரி குறித்து கபிலர் கூறுவார். நம் தமிழ்நாடும் அப்படித்தானே... ‘சமூக நீதி எனும் திசை மாற மாட்டோம்’ என உரக்கச் சொல்லும் தமிழ்நாடும் அப்படித்தான்” என்றார். கதைசொல்லும் பாணியின் சிறப்பு நிகழ்ச்சி நெறியாளர் கோபிநாத் பேசும்போது, “வேள்பாரி நாவலை ஏழு ஆண்டுகள் ஆய்வு செய்து, மிகுந்த அர்ப்பணிப்புடன் சு.வெ. படைத்திருக்கிறார். இந்த நாவலில் அவர் ஒரு சுற்றுலா வழிகாட்டியைப்போல வாசகர்களை நாவலுக்குள் அழைத்துச் செல்கிறார். கபிலர் கையை நீலன் பிடித்து அழைத்துச் செல்கிறார். அவர்கள் இருவர் கையையும் பிடித்து சு.வெங்க டேசன்  அழைத்துச் செல்வதைப்போல் இருக்கி றது. அவர்களோடு சேர்த்து, நம்மையும் கூடவே அழைத்துச் சென்று கதை சொல்கிறார். அப்பா மகனுக்குக் கதை சொல்வதைப் போல நாவல் இருக்கிறது. ஒரு பூமாலை கட்டு வதைப்போல கட்டியிருக்கிறார். அரசியல், நீதி, நிர்வாகம், கருணை, அறம், காதல், கலவி, வஞ்சனை, துரோகம், ஆத்திரம், எரிச்சல், கவிதை என அத்தனையையும் பேசியிருக்கிறார். நாவலில் ஆண்கள் எப்படி வலிமையோடு, அறிவோடு காட்டப்படுகிறார்களோ, அதே போலத்தான் பெண்களும் காட்டப்படுகிறார்கள். சுதந்திரமான பெண்களாகக் காட்டப்பட்டி ருக்கிறார்கள். உண்மையில், தமிழ்ப் பெண்கள் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். இவ்வளவு உணர்வுகளை உள்ளடக்கி வைத்திருக்கும் இந்தப் புத்தகம் இவ்வளவு கனமாகத்தான் இருக்கும். மணியன் செல்வம் அவர்களின் ஓவியம் அவ்வளவு அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், காட்சிகளையும் அவற்றின் தன்மை குறையாமல் கண்முன் கொண்டுவந்து நிறுத்தினார். ஏஐ தொழில்நுட்பத்தால் கூட இந்த ஓவியத்தில் இருக்கும் உணர்ச்சியை, இப்படிக் கண்முன் கொண்டு வந்து நிறுத்த முடியுமா என்று தெரியவில்லை. அதுதான் ஓவியரின் ஆற்றல்” என்றார். 10 லட்சம் பிரதிகள் இலக்கு முன்னதாக வரவேற்புரையாற்றிய விகடன் குழும நிர்வாக இயக்குநர் சீனிவாசன், “புத்தக வடிவில் தோன்றிய ‘வேள்பாரி’ ஆறு ஆண்டுக ளில் ஒரு லட்சம் பிரதிகளை விற்றுத் தீர்த்தி ருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பான வரலாற்றின் நாயகர்களை சு.வெங்கடே சன் தன் எழுத்தால் உயிர் கொடுக்க, அந்த மாபெரும் தலைமுறைக்குத் தன் தூரிகையால் ஓவியம் கொடுத்தார் மணியம் செல்வன். சு.வெங்கடேசன் எங்களுக்கு கிடைத்த வரம். தமிழர் அறத்தை, வீரத்தை, மாண்பை இளைய தலைமுறைக்குச் சொன்னது ‘வீரயுக நாயகன் வேள்பாரி.’ உலகெங்கும் போர்களால் பேரழிவுகள் நிகழ்ந்துவரும் இன்றைய சூழலில், போருக்கெதிராகத் தமிழ் மக்கள் முழங்கிய வரலாற்றைப் பேசுகிறது. அடுத்த விழாவின் இலக்கு 10 லட்சம் பிரதிகள். அதன் பிறகு ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் ‘வேள்பாரி’ இருக்கும் நாள் வரும்” என்றார்.  நிறைவாக, வேள்பாரி நாவலாசிரியர் சு.வெங்கடேசன் எம்.பி. ஏற்புரை நிகழ்த்தினார். தொகுப்பு : செ.கவாஸ்கர்