போராட்டச் சுடர்களுடன் உணர்ச்சிமயமான வாலிபர் சங்க மாநாடு
வாலிபர் சங்க வரலாற்று கண்காட்சியை முன்னாள் மாநிலச் செயலாளர் சு.பொ.அகத்தியலிங்கம் திறந்து வைத்தார்.
தியாகி ஆதித்த வர்த்தன ஸ்ரீ-ன் தந்தை நாராயணப்பாவை அகில இந்திய தலைவர் ஏ.ஏ.ரஹீம் கவுரவித்தார்.
மாநாட்டுக் கொடியை மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் ஏற்றி வைத்தார்.
தியாகிகள் ஸ்தூபிக்கு செவ்வணக்கம்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18ஆவது மாநில மாநாடு அக்டோபர் 12 முதல் 14 வரை ஓசூரில் போராட்ட உணர்வுடன் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் முன்னிரவில் பெரியார் சதுக்கம் நூறடி சாலையில் உள்ள தோழர் ஆதித்த வர்த்தன ஸ்ரீ நினைவு திடலில் பொதுக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெவ்வேறு போராட்ட அடை யாளங்களுடன் தியாகச் சுடர்கள், கொடி மற்றும் கொடிக்கம்பங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. இவை அனைத்தும் ஓசூரில் சங்கமித்து, பொதுக்கூட்ட மேடை யில் மாநில மற்றும் அகில இந்திய தலைவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டன. வடலூரில் இருந்து சமத்துவச் சுடரை அகில இந்திய தலைவர் ஏ.ஏ. ரஹீம் பெற்றார். மேலூர் அரிட்டாப்பட்டியில் இருந்து சுற்றுச்சூழல் சுடரை சிபிஎம் நாடாளு மன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் ஏற்றார். கடலூரில் இருந்து தோழர் குமார், ஆனந்தன் நினைவாக போதைக்கு எதிரான போராட்ட சுடர் வந்தடைந்தது. கீழடியில் இருந்து பண்பாட்டுச் சுடரை மாநில தலைவர் எஸ். கார்த்திக் பெற்றார். சென்னையில் இருந்து வேலை உரிமை சுடர், பாலின சமத்துவ சுடர் கொண்டுவரப் பட்டன. தூத்துக்குடியில் இருந்து சாதி ஆணவப்படுகொலைக்கு எதிரான கவின் சுடர், காஞ்சிபுரம் சாம்சங் நிறுவன வாயிலில் இருந்து போராட்ட சுடர்களை, மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், பொருளாளர் எஸ்.பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். கிருஷ்ணகிரியில் இருந்து தியாகி ஆதித்த வர்த்தன ஸ்ரீ-யின் நினைவுச் சுடரை அகில இந்திய தலைவர் ரஹீம் பெற்றார். கள்ளக்குறிச்சியில் இருந்து சேட்டு நினைவாக கொடிப்பயணம், திருநெல்வேலியில் இருந்து அசோக் நினைவாக கொடிமரமும் கொடிக் கயிறும் வந்தன. திருப்பூரில் இருந்து தியாகிகள் நினைவுச் சுடரும், நாகையில் இருந்து வர்க்கப் போராட்டத்தின் அடையாளமான வெண்மணித் தியாகிகள் நினைவுச் சுடரும் வந்து சேர்ந்தன. ஒவ்வொரு சுடரும் தமிழக மக்களின் போராட்ட வரலாற்றை எடுத்துக் காட்டின. உணர்வுப்பூர்வமான நிகழ்வுகள் தியாகி ஆதித்த வர்த்தன் ஸ்ரீ-யின் தந்தை நாராயணப்பாவை அகில இந்திய தலைவர் ஏ.ஏ. ரஹீம் பொன்னாடை போர்த்தி கவு ரவித்தார். போராட்டத்தில் உயிர் நீத்த மகனின் நினைவு மங்காமல் வாழும் அந்த முதியவரின் கண்களில் பெருமையும் வேதனையும் கலந்து ததும்பியது. கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் கே. இளவரசன் மற்றும் நவினா தம்பதி யினரின் பெண் குழந்தைக்கு ‘மார்க்சிய நிலா’ என்று ரஹீம் எம்.பி., பெயர் சூட்டி னார். அடுத்த தலைமுறையே வர்க்கப் போராட்டத்தின் தொடர்ச்சி என்பதை உணர்த்தும் நிகழ்வாக அது அமைந்தது. வர்க்க உணர்வுடனும், போராட்ட உறுதி யுடனும் தொடங்கியுள்ள இந்த மாநாடு இளைஞர்களின் எதிர்காலப் போராட்டங் களுக்கு வழிகாட்டியாக அமையும்.