tamilnadu

img

கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பெண்ணின் உறவினர்கள் சிபிஎம் தலைமையில் முற்றுகை

கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பெண்ணின்  உறவினர்கள் சிபிஎம் தலைமையில் முற்றுகை

கர்ப்பிணி மரணத்தில் சந்தேகம்

கரூர், ஜூலை 12-  கர்ப்பிணிப் பெண் மரணத்தில் சந்தே கம் இருப்பதாகக்கூறி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் பெண்ணின் உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் முற்றுகையிட்டனர். இதை யடுத்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தும், கரூர் கோட்டாட்சியர் நேரிலும் விசாரணை மேற்கொண்டார்.  கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக் கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுரேஷ்(30). இவரது மனைவி லோகப்பிரியா(28). இவர்க ளுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டு கள் ஆன நிலையில், லோகப்பிரியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இதனிடையே, லோகப்பிரியா தனது பெற்றோர் வீடான திண்டுக்கல் மாவட்டம்,  பாளையத்திற்கு கடந்த இரு மாதங்களு க்கு முன் வந்துள்ளார். அங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று அவ்வப்போது உடலை பரிசோதித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி லோகப்பிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிரசவ வார்டுக்கு லோகப்பிரியாவை மாற்றிய போது, அவருக்கு பனிக்குடம் உடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள னர். இதனால், ஜூலை 5 ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.  ஆனால் லோகப்பிரியாவுக்கு அதிக ரத்தப்போக்கு இருந்ததால், கர்ப்பப்பை யை எடுத்தால்தான் உயிரை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். இதனால், லோகப்பிரி யாவின் உயிர் முக்கியம் என்று கணவர் சுரேஷ், கர்ப்பப்பையை அகற்ற சம்ம தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர் .  இந்நிலையில் 9 ஆம் தேதி அதி காலை 12.30 மணியளவில் திடீரென  உடல்நிலை மோசமாகி லோகப்பிரியா  இறந்து விட்டார். இதனால் லோகப் பிரியாவுக்கு சிகிச்சையளித்ததில் சந்தேகம் இருப்பதாகவும், பயிற்சி மருத்துவர்கள் மூலம் சிகிச்சையளித்த தாகக் கூறி லோகப்பிரியாவின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மருத்துவமனையின் உடற்கூராய்வு மையத்தை முற்றுகை யிட்டு உடலை வாங்க மறுத்து போராட் டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து, தகவல் கிடைத்ததும் கரூர் நகர துணைக் காவல் கண்கா ணிப்பாளர் செல்வராஜ் தலைமையி லான காவல்துறையினர், போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உடனடியாக வழக்கு பதிந்து, கரூர் கோட்டாட்சியர் மருத்துவ மனைக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து போ ராட்டத்தை கைவிட்டு லோகப்பிரியாவின் உடலை வாங்கிச் சென்றனர்.  இப்போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.சுப்பிரமணியன், மாநகரச் செயலா ளர் எம்.தண்டபாணி, கடவூர் வட்டச் செயலாளர் பி.பழனிவேல், குஜிலியம் பாறை ஒன்றியச் செயலாளர் ஜெயபால் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பி னர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  கணவர் புகார் மனு இதுகுறித்து, லோகப்பிரியாவின் கணவர் சுரேஷ் கொடுத்த புகார் மனுவில்,  “எனது மனைவி லோகப்பிரியா மர ணத்தில் சந்தேகம் உள்ளது. என்  மனைவிக்கு  முறையான மருத்துவர்க ளை கொண்டு சிகிச்சை அளிக்காமல், பயிற்சி மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளித்துள்ளதால் அவர் இறந்துள்ளார் என்ற சந்தேகம் உள்ளது.  கரூர் கோட்டாட்சியர் உரிய விசா ரணை மேற்கொண்டு லோகப்பிரியா உயிரிழப்பிற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். மேலும் அவரது உடற்கூராய்வை வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும். மரணத்திற்கு கார ணமான மருத்துவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு துறைரீதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறி யிருந்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு கூறுகையில், “லோகப்பிரியா வின் உயிரிழப்பிற்கு காரணமாக இருப்பது மருத்துவர்களின் அலட்சியப் போக்குதான். மேலும் மருத்துவக் கல்லூரி மாணவர்களை அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தி இருப்பார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சீர்கேட்டை சரி செய்து கொள்வதற்கு பலமுறை மருத் துவமனை நிர்வாகத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு முறையிட்டும் அதனைச் சரி செய்ய நிர்வாகம் தயாராக இல்லை என்பதற்கு லோகப்பிரியாவின் மரணம் சாட்சியாக உள்ளது. இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது.   மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யின் முதல்வரிடம் லோகப்பிரியாவின் மரணம் குறித்து புகார் தெரிவித்த போது, அப்போது பணியில் இருந்த மருத்துவர்க ளிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.