tamilnadu

img

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எங்கே? கே.எஸ். அழகிரி "ட்வீட்"

மதுரை, ஏப்.6-
கொரோனா தாக்கம் தமிழகத்தில் தொடங்கியதிலிருந்து தினம்தோறும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஆனால், கடந்த ஓரிரு தினங்களாக அவர் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. மாறாக சுகாதா ரத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கங்களை அளித்துவருகிறார். அவரது பேட்டியும் தில்லி முஸ்லிம்கள் மாநாட்டில் பங்கேற்றவர்களை குறிவைத்தே உள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி திங்களன்று தமது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து கேள்வியெழுப்பியிருக்கிறார். அவர் தமது பதிவில், "ஆனால் சமீபகாலமாக பத்திரிகையாளர்களை சந்தித்துக்கொண்டிருந்த அமைச்சருக்கு  பதிலாக சுகாதாரத்துறை செயலாளர் சந்தித்து வருகிறார். இத்தகைய திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை அறிய மக்கள் விரும்புகிறார்கள்."

"கொரோனா நோயை எதிர்த்து சுகாதாரத்துறையை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், பணியாளர்கள், தங்களை நோய் தொற்றிவிடும் என்கிற கவலை கடுகளவும் இல்லாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகிறார்கள். அவர்களை பாராட்டுகிறேன், போற்றுகிறேன்." "ஆனால் தலைநகர் சென்னையில் இருந்து கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடவேண்டிய  சுகாதார அமைச்சர்  சமீபகாலமாக பார்வையில் தென்படாமல் இருக்கிறார்.  இச்சூழலில் நேற்று மாலை புதுக்கோட்டையில், தமது வீட்டில் அகல் விளக்கை ஏற்றியிருக்கிறார்." எனக்குறிப்பிட்டுள்ளார்.