என்னதாம்ப்பா, பிரச்சனை..?
இப்படித்தான் உச்சநீதிமன்றத்தில் வினா எழுப்பினார்கள். ஒவ்வொரு ஆண்டும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் பயிற்சி எடுத்துக் கொள்ளும் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை அரை சதத்தை எட்டுகிறது. பதிவு செய்யப்படாத தற்கொலைகள் தனி. 2025 ஆம் ஆண்டிலும் இது தொடர்கிறது. இது குறித்த ஒரு வழக்கின்போதுதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள், “கோட்டாவில் மட்டும் தற்கொலைகள் அதிகமாக இருக்குதே.. அங்க என்னதான் பிரச்சனை” என்று கேட்டனர். ராஜஸ்தான் காவல்துறையினரைப் பொறுத்தவரையில், இது வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சனைதான். பயிற்சி மையங்களைப் பொறுத்தவரையில், வியாபாரம். அவற்றை நடத்துவது ஆளுங்கட்சியின் பிரமுகர்கள். எவ்வளவு விரைவில் தற்கொலைகளை மறக்கடிப்பது என்பதுதான் அவர்கள் பிரச்சனை. பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களின் அழுத்தங்கள் மட்டுமல்ல, பயிற்சி மையங்களில் போடப்படும் அழுத்தங்களைத் தாங்க முடியாமல்தான் இந்த முடிவுக்குப் போகிறார்கள். ஒரு மாணவன், வந்த 20வது நாளே தூக்கில் தொங்கினான். யூனிட் டெஸ்ட் என்ற பெயரில் வைக்கப்படுவதில் ஒவ்வொரு முறையும் கடைசி மதிப்பெண் எடுத்தான். தகவல் பலகையில் அது ஒட்டப்படுவதால் ஒட்டுமொத்த பயிற்சி மையத்தின் கேலிக்கும் ஆளானான். தேச நலனில் அக்கறையுள்ள கல்வியாளர்களைக் கொண்டு இந்தப் பிரச்சனையை அணுக வேண்டும் என்றும், நீட் தேர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கோருகின்றன.
